/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் ஆவேசம்
/
கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் ஆவேசம்
கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் ஆவேசம்
கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் ஆவேசம்
ADDED : மார் 22, 2025 03:26 AM
புதுச்சேரி: போலி போராளிகள் பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்வோர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என எம்.எல்.ஏ.,க்கள் ஆவேசமாக பேசினர்.
சட்டசபை பூஜ்ய நேரத்தின்போது எழுந்த கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., மிக முக்கியமான அதிகாரிகளின் பிரச்னையை சட்டசபையின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன். புதுச்சேரியில் போலி போராளிகள் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றனர்.
இதனால் அதிகாரிகள் மன உலைச்சலில் உள்ளனர். அதிகாரிகளை மட்டுமின்றி எம்.எல்.ஏ.,க்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைவரையும் மிரட்டுகின்றனர்.
எங்காவது லே-அவுட் போட்டால் அவ்வளவு தான். அதில் எங்களுக்கு இரண்டு பிளாட் வேண்டும் என மிரட்டுகின்றனர்.
இப்போது சார் பதிவாளரை இந்த கும்பல் மிரட்டியுள்ளது. இதற்கான ஆடியோ என்னிடம் உள்ளது.
தொடர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்யும் இந்த கும்பல் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க எதற்கு பயப்படுகிறது. இந்த கும்பல் அரசு ஊழியர்களாகவும் இருக்கின்றனர். சிலர் மீது 22 வழக்குகள் உள்ளது. இந்த போலி கும்பலை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
சம்பத்(தி.மு.க.,): நானும் வீடு அபகரிப்பு கும்பல் குறித்து ஏற்கனவே அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து எச்சரித்துள்ளேன். இது போன்ற கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் கலெக்டருக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும்.
ராமலிங்கம்(பா.ஜ.,): பத்திரப்பதிவு அலுவலகங்களில் நிலத்தை வாங்குவோர், விற்பவர்களை தவிர்த்து மற்றவர்களுக்கு வேலையில்லை. ஆனால் தேவையில்லாத நபர்களை உள்ளே அனுமதிக்கின்றனர்.
இந்த கும்பல் யார் நிலத்தை வாங்குகின்றனர், யார் நிலத்தை விற்கின்றனர், எவ்வளவு பணம் பரிமாற்றம் நடந்தது என அனைத்து தகவல்களையும் ஜெயிலில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்து மிரட்டுகின்றனர்.
பத்திரப்பதிவு அலுவலகங்கள் இப்படி தான் இருக்கின்றன. தேவையில்லாத நபர்களை பத்திரப்பதிவு அலுவலகங்களில் உள்ளே விட கூடாது.
அங்காளன்(சுயே): அரசு ஊழியர்களாக இருந்து கொண்டு இப்படி செய்கின்றனர். என்னிடம் இப்படி நடந்தனர். நான் போலீசில் புகார் அளித்தேன். சில நாட்களில் சிம்பிளாக ஜாமினில் வெளியே வந்துவிட்டனர். சில அரசு ஊழியர்கள் மீது வழக்குகள் உள்ளது. இவர்கள் எப்படி அரசு ஊழியர்களாக பணியில் தொடருகின்றனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி என்.ஆர்.காங்.,-பா.ஜ., சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களும் பேசினர்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் செல்வம்:
சார் பதிவாளர் மிரட்டப்பட்ட சம்பவத்தில் உடனடியாக காவல் துறை நடவடிக்கை எடுக்கப்படும். உள்துறை அமைச்சர் இது சம்பந்தமாக காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து அறிவிப்பு வெளியிடுவார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.