/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பூஜ்ய நேரத்தில் எம்.எல்.ஏ.,க்கள் பேசியதாவது
/
பூஜ்ய நேரத்தில் எம்.எல்.ஏ.,க்கள் பேசியதாவது
ADDED : மார் 21, 2025 05:25 AM
பப்புகளுக்குள் சிறுவர்களை அனுமதிக்க கூடாது; சம்பத்
சம்பத் (தி.மு.க.,) : சமீபத்தில் எனது எம்.எல்.ஏ., அலுவலகத்தின் அருகே உள்ள பப்பிற்கு பள்ளியில் படிக்கும் சிறுவர்கள்பிறந்தநாள் கொண்டாட சென்றனர். 18 வயதுக்கு உட்பட்டோரை பார்களில் அனுமதிக்கக்கூடாது என விதிமுறை உள்ளது. தியேட்டர்களில் கூட ஏ சான்றிதழ் படங்களுக்கு அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.ஆனால் புதுச்சேரியில் மதுபார்களுக்குள் அனுமதிக்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. சிறுவர்களின் எதிர்காலத்தை பாதிக்க செய்யும். 18 வயதுக்கு உட்பட்டோரை மதுபார்களுக்குள் அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்த வேண்டும்.
விதவைகளுக்கு ரூ. 500 உதவித் தொகை; சந்திரபிரியங்கா
சந்திரபிரியங்கா(என்.ஆர்.காங்.,): சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு உதவித் தொகை 1000 ரூபாயில் இருந்து 2,500 ரூபாய் உயர்த்தி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மஞ்சள் ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கையை ஏற்று மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். கணவரோடு வாழும் குடும்ப தலைவிகளுக்கு, சிவப்பு ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு ரூ. 2,500 வழங்க முடிவு செய்துள்ள சூழ்நிலையில், விதவைகளுக்கு ரூ. 2 ஆயிரம் தான் வழங்கப்படுகிறது. அவர்களுக்கும் ரூ. 500 உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும்.
வீடுகளுக்கே சென்று வாழ்நாள் சான்றிதழ்; நேரு
நேரு (சுயே) : மாநிலத்தில் அரசு ஊழியர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். அவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை மே மாதம் வாழ்நாள் சான்றிதழ் அளிக்க வேண்டும். இதனால் வயதானவர்கள் கணக்கு மற்றும் கருவூலம் செல்ல சிரமப்படுகின்றனர். துணையாக ஆட்களை தேடுவது, வாகன வாடகை, உடல்நலம் என பல சிரமம் நிலவுகிறது. தமிழகத்தில் அஞ்சல் துறை மூலம் ஓய்வுதியதாரர்களின் இருப்பிடத்திற்கே சென்று வாழ்நாள் சான்றிதழ் பெற புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த சான்றிதழுக்காக ஒருவருக்கு ரூ.70 கட்டணம் வசூலிக்கின்றனர். இதை பின்பற்றி புதுச்சேரியில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இலவச குடிநீர் திட்டம் சாத்தியமா? அங்காளன்
அங்காளன் (சுயே): புதுச்சேரி நகர பகுதியில் டி.டி.எஸ்., அதிகம் உள்ள பகுதிகளில் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் எந்த வகையில் நடைமுறையில் சாத்தியம் என்று தெரியவில்லை. சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பருகுவதால் எலும்பு தேய்மானம் உள்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாகவும், ஓரிரு மாதங்களில் சுத்திகரிப்பு இயந்திரை தடை செய்யப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. அப்படி இருக்கும்போது புதுச்சேரியில் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கலாமாக என்பதை அரசின் முடிவிற்கே விட்டுவிடுகிறேன். எதையும் ஆலோசித்து செயல்படுத்துங்கள்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கல் என்பது நிரந்தர தீர்வாக இருக்காது. இருக்கிறதை விட்டுவிட்டு பறக்கறதை பிடிப்பதாக அரசின் செயல்பாடு உள்ளது.நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்யும் வகையில் மாநிலம் முழுதும் உள்ள ஏரி, குளம், வாய்க்கால்களை துார்வார அரசு முனைப்பு காட்ட வேண்டும்.
ஏனாம், காரைக்கால் நாறுது
கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் (சுயே): ஏனாமில் வீடுகள் தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை குப்பை கிடங்கில் கொட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனாமில் ஏற்கனவே நீர் நிலையோரம் குப்பை கொட்டப்பட்டது. நீர்நிலைகளில் கொட்டாமல் குப்பைகளை தரம்பிரிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில், குப்பைகளை பிரிக்க இடம் கண்டறியப்பட்டது. ஆனால் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.கடந்த நாட்களாக குப்பைகளை எங்கும்கொட்டப்படவில்லை.
வாகனங்களில் குப்பைகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. எங்கு கொட்டப்பட உள்ளது என்றும் தெரியவில்லை.ஏனாம் மக்களின் சுகாதார பிரச்னையில் போர்க்கால அடிப்படையில் அரசு தலையிட வேண்டும். குப்பைகளை தரம்பிரிக்கவும், பாதுகாப்பான முறையில் அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்யாத பணிக்கு எதற்கு பணம்; பி.ஆர்.சிவா
பி.ஆர்.சிவா (சுயே): காரைக்கால் சுற்றுலா நகரமாக உள்ளது. ஆனால் நகரம் துாய்மையாக வைத்து கொள்ளப்படவில்லை. காரைக்காலில் குப்பை வார ஒரு நிறுவனத்திற்கு பணியை ஓப்படைத்துள்ளீர்கள்.
ஆனால் அந்த நிறுவனம்சரிவர குப்பைகளை அப்புறப்படுத்தப்படவில்லை.
காரைக்காலில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசுகின்றது.
காரைக்கால் எம்.எல்.ஏ.,க்கள் பல முறை சொல்லி விட்டோம். அந்நிறுவனத்திற்கான டெண்டரை ரத்து செய்து புதிய நிறுவனத்திற்கு அப்பணியை கொடுக்க வேண்டும்.
இல்லையெனில் முன்பு இருந்தது போன்று கொம்யூன் பஞ்சாயத்துகள் வாயிலாக கூட குப்பைகளை அகற்றலாம். செய்யாத பணிக்காக அரசின் பல கோடி பணம் எதற்காக விரையமாக கொடுக்க வேண்டும்.