/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மொபைல் போனில் 'கேம்' தாய் கண்டிப்பு; மகன் தற்கொலை
/
மொபைல் போனில் 'கேம்' தாய் கண்டிப்பு; மகன் தற்கொலை
ADDED : நவ 04, 2024 06:15 AM
புதுச்சேரி : மொபைல்போனில் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ் 2 மாணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி பிள்ளைத்தோட்டம், கங்கை அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அமலா. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கிறார். இவரது மகன் திருமுருகன், 17; தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 2 மாதங்களாக மொபைல் போனில் கேம் விளையாடி வந்தார். இதனை கண்ட தாய் அமலா, கேம் விளையாடி வந்தால் படிப்பில் கோட்டை விட்டு விடுவாய் என கண்டித்ததுடன், கடந்த 2 நாட்களாக மொபைல் போனை மகன் திருமுருகனிடம் வழங்க வில்லை.
அதற்காக திருமுருகன் தாய் அமலாவிடம் தகராறு செய்து சரிவர சாப்பிடாமல் இருந்தார். நேற்று முன்தினம் காலை கல்லறை திருநாள் என்பதால், தென்னஞ்சாலை சர்ச்சுக்கு செல்ல வேண்டும் என மகன் திருமுருகனை அமலா அழைத்தார்.
திருமுருகன் வரமறுத்தார். அதற்கு, வீட்டில் இருந்து கொண்டு கேம் விளையாட போகிறாயா என கேட்டு விட்டு மொபைல்போனை எடுத்து கொண்டு புறப்பட்டார். அப்போது, திருமுருகன் இந்த வீட்டில் எனக்கு சுதந்திரமே இல்லை. நீ வருவதற்குள் நான் இருக்க மாட்டேன் என கூறினார்.
அமலா சர்ச்சுக்கு சென்று மாலை 5:00 மணிக்கு வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் ஹாலில் திருமுருகன் புடவையால் துாக்கிட்டு, தொங்கி கொண்டிருந்தார்.
இதை பார்த்த அமலாவின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, திருமுருகனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் பரிசோதித்து திருமுருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.