புதுச்சேரி வருகிறார் மோடி; ஏப்., 3ம் தேதி 'ரோடு ஷோ'
புதுச்சேரி வருகிறார் மோடி; ஏப்., 3ம் தேதி 'ரோடு ஷோ'
ADDED : மார் 25, 2026 06:36 AM

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள, ஏப்ரல் 3ம் தேதி, பிரதமர் மோடி புதுச்சேரி வருகிறார்.
புதுச்சேரி பா.ஜ., தலைவர் ராமலிங்கம் கூறியதாவது: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் சிறப்பான கூட்டணியை ஏற்படுத்தி, தேர்தலுக்கு தயாராகி விட்டோம். ஆனால், காங்., - தி.மு.க., கூட்டணியில், ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையில்லாமல், யார் முதல்வர் என விவாதித்து வருகின்றனர்.
புதுச்சேரியில், மீண்டும் தே.ஜ., கூட்டணி அரசை கொண்டு வந்து நலத்திட்டங்களை தொடருவதே, எங்கள் நோக்கம். அதற்காக, சிறப்பான வேட்பாளர்களை அறிவித்துள்ளோம்.
அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, வரும் 27 முதல் 29ம் தேதி வரையிலான நாட்களில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், முன்னாள் தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர், புதுச்சேரி வருகின்றனர்.
வரும் ஏப்., 3ம் தேதி, புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வருகிறார். புதுச்சேரியில் நடக்கும் 'ரோடு ஷோ' வில் பங்கேற்று, தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
