வில்லியனுார் மாதா ஆலயத்தில் உண்டியல் பணம் கொள்ளை
வில்லியனுார் மாதா ஆலயத்தில் உண்டியல் பணம் கொள்ளை
ADDED : ஏப் 25, 2026 08:04 PM
வில்லியனுார்: வில்லியனுார் லுார்து மாதா ஆலயத்தில் நள்ளிரவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வில்லியனுாரில் பிரசித்திபெற்ற லுார்து அன்னை மாதா ஆலயம் உள்ளது. இங்கு சமீபத்தில் ஆண்டு பெருவிழா நடந்தது. ஆலய உள்வளாகத்தில் நான்கு உண்டியல்கள் வைத்திருந்தனர். கடந்த 23ம் தேதி வழக்கம் போல் ஆலயம் நடை சாற்றப்பட்டு மறு நாள் (24ம் தேதி) காலை வழக்கம்போல் ஊழியர் ஆலயத்தை திறந்தார்.
அப்போது ஆலயத்தின் உள் வளாகத்தில் வைத்திருந்த நான்கு உண்டியல்களும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர், ஆலய பங்குத்தந்தை ஆல்பர்டிற்கு தகவல் தெரிவித்தார்.
ஆலய பங்குதந்தை ஆல்பர்ட் புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர், கதவை இரும்பு கம்பியால் உடைத்து உள்ளே சென்று உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அப்பகுதியில் இருந்த கைரேகை தடையங்களை சேகரித்து, குற்றவாளி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு உண்டியல்களிலும் 50 ஆயிரத்திற்கும் மேல் இருந்திருக்கலாம் என, ஆலயம் சார்பில் தெரிவித்துள்ளனர்.
மாதா ஆலயத்தில், நள்ளிரவில் நடந்த திருட்டு சம்பவம், பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
