/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் அன்னை பிறந்த நாள் விழா
/
புதுச்சேரியில் அன்னை பிறந்த நாள் விழா
ADDED : பிப் 22, 2024 06:44 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் அன்னையின் பிறந்த நாளையொட்டி, அரவிந்தர் ஆசிரமத்தில் அவரது அறையை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தினை நிறுவிய பக்தர்களால் அன்னை என அழைக்கப்படும் மீரா அல்பாசா, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 1878ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி பிறந்தார். அரவிந்தரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, 1914ல் புதுச்சேரிக்கு வந்த அன்னை, பல்வேறு ஆன்மிக சேவைகளை புரிந்து, பொது மக்களுக்கு சேவையாற்றி 1973 நவம்பர் 17ம் தேதி மறைந்தார்.
இந்தியாவிற்கு சேவை செய்ததுடன், மனித குல ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாக திகழ புதுச்சேரி அடுத்த ஆரோவில்லில் சர்வதேச நகரை நிறுவினார். அன்னையின் 146-வது பிறந்தநாள் விழா நேற்று உலகம் முழுதும் பக்தர்களால் கொண்டாடப்பட்டது.
அதனையொட்டி, புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அரவிந்தர், அன்னை மீரா தங்கியிருந்த அறைகள் பக்தர்களின் சிறப்பு தரிசனத்துக்கு திறந்து வைக்கப்பட்டது.
அதுபோல் அவர்கள் பயன்படுத்தியப் பொருள்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. வண்ண மலர்களால் அவர்களது சமாதிகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. இதையொட்டி, ஆசிரமத்திற்கு வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த அவரது அறைகளையும், பொருட்களையும் பார்வையிட்டு சமாதியை மலர் துாவி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து நடந்த கூட்டு தியானத்தில் பங்கேற்றனர். இதில், பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.