வர்ணம் அடிக்காத வேகத்தடைகளில் விழுந்து காயமடையும் வாகன ஓட்டிகள்
வர்ணம் அடிக்காத வேகத்தடைகளில் விழுந்து காயமடையும் வாகன ஓட்டிகள்
ADDED : ஏப் 15, 2026 10:24 PM

வில்லியனுார்: வில்லியனுார் கோட்டைமேடு முதல் உறுவையாறு நான்கு ரோடு வரை புதிதாக போடப்பட்ட தார் சாலையில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் அடிக்காததால், இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து காயமடைகின்றனர்.
வில்லியனுார் - பாகூர் செல்லுவதற்கு, முக்கிய வழித்தடமாக உள்ள இந்த சாலை உறுவையாறு, கரிக்கலாம்பாக்கம், அரங்கனுார் வழியாக பாகூர் சென்றடைகிறது. புதுச்சேரி பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் தெற்கு கோட்டம் சார்பில், வில்லியனுார் கோட்டைமேடு முதல் கரிக்கலாம்பாக்கம் வரையில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
முதற்கட்டமாக கடந்த வாரம் கோட்டைமேடு முதல் உறுவையாறு நான்கு ரோடு சந்திப்பு வரையில் இரவோடு இரவாக புதிய தார் சாலை அமைத்துள்ளனர். ஒரு கிலோ மீட்டர் துாரம் வரையில் தற்போது போடப்பட்டுள்ள புதிய தார் சாலையில் பள்ளி மற்றும் கல்லுாரி, பெட்ரோல் பங்க் என, 10க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அமைத்துள்ளனர்.
இந்த வேகத்டைகளில் வெள்ளை வர்ணம் அடிக்கப்படவில்லை; எச்சரிக்கும் பலகையோ ரிப்லக்டரோ இல்லை. இதனால், இவ்வழியே வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பதே தெரியாமல் அதன்மீது ஏறி இறங்கும் போது நிலை தடுமாறி விழுந்து வாரி காயமடைகின்றனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோட்டைமேடு முதல் உறுவையாறு வரையில் உள்ள வேகத்தடையில் வெள்ளை வர்ணம் அடித்து, எச்சரிக்கை பலகை அல்லது ரிப்லக்டர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
