திசை மாறிய பந்தலால் வெயிலில் நிற்கும் வாகன ஓட்டிகள்
திசை மாறிய பந்தலால் வெயிலில் நிற்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஏப் 17, 2026 04:07 AM

புதுச்சேரி: திசை மாறி வேறு இடத்தில் அமைக்கப்பட்ட பந்தலால் வாகன ஓட்டிகள் வெயிலில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வாகன ஓட்டிகளின் நலனுக்காக அமைக்கப்பட்ட நிழற்பந்தல், தவறான இடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் உக்கிரம் முன்கூட்டியே துவங்கிவிட்டது. மதிய வேளைகளில் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத அளவிற்குசூழல் நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு, முக்கிய சாலைச் சந்திப்புகளில் வாகன ஓட்டிகள் சிக்னலுக்காகக் காத்திருக்கும்போது நிழலில் நிற்கும் வகையில், பொதுப்பணித்துறை சார்பில்,நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அரசின் இந்த நடவடிக்கைக்குப் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆனால், நகரின் முக்கிய சந்திப்பான ராஜா தியேட்டர் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள பந்தல், எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதற்கு மாறாக உள்ளது. சிக்னலில் வாகனங்கள் நிற்கும் இடத்தில் பந்தலை அமைக்காமல், வாகனங்கள் சிக்னலை கடந்து செல்லும் பாதையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், சிவப்பு விளக்கு எரியும்போது வாகன ஓட்டிகள் சுட்டெரிக்கும் வெயிலிலேயே நிற்க வேண்டியுள்ளது. வாகனங்கள் நகர்ந்து செல்லும் பகுதியில் நிழல் இருப்பதால், யாருக்கும் பயனில்லாத பயனற்ற பந்தலாக இது காட்சியளிக்கிறது. அதிகாரிகளின் கவனக்குறைவால் பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வெயிலின் தாக்கம் இன்னும் சில வாரங்களுக்கு அதிகமாக இருக்கும் என்பதால், ராஜா தியேட்டர் சந்திப்பில் உள்ள நிழற்பந்தலை உடனடியாக மாற்றி, வாகனங்கள் நிற்கும் பகுதிக்கு நேராக அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
