மும்மொழி கொள்கையை கைவிட வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தல்
மும்மொழி கொள்கையை கைவிட வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தல்
ADDED : ஏப் 29, 2026 04:35 AM
புதுச்சேரி: மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை கைவிட வேண்டும் என, காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரி சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 2026--27 கல்வியாண்டு முதல் 5ம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கையை கட்டாயமாக்கியுள்ளது. இதில் இரண்டு இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மொழிகளாகவும், ஒரு மொழி வெளிநாட்டு மொழியாகவும் இருக்க வேண்டும் என, கூறியுள்ளது.
புதுச்சேரியில் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகள் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவை. இங்கு ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் என இரு வெளிநாட்டு மொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது; கல்விக்கூடங்களில் கற்பிக்கப்படுகிறது.
இது பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று வர புதுச்சேரி மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழிக் கொள்கை புதுச்சேரி மக்களின் மொழி கற்கும் உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது. எனவே மத்திய அரசு மும்மொழிக் கொள்கை அமல்படுத்துவதை கைவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
