/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முறைகேடாக சூதாட்ட கிளப்பிற்கு அனுமதி ஏனாம் நகராட்சி ஆணையர் 'சஸ்பெண்ட்'
/
முறைகேடாக சூதாட்ட கிளப்பிற்கு அனுமதி ஏனாம் நகராட்சி ஆணையர் 'சஸ்பெண்ட்'
முறைகேடாக சூதாட்ட கிளப்பிற்கு அனுமதி ஏனாம் நகராட்சி ஆணையர் 'சஸ்பெண்ட்'
முறைகேடாக சூதாட்ட கிளப்பிற்கு அனுமதி ஏனாம் நகராட்சி ஆணையர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜன 21, 2024 04:05 AM

புதுச்சேரி: முதல்வர் உத்தரவை மீறி சூதாட்ட கிளப்பிற்கு அனுமதி வழங்கிய ஏனாம் நகராட்சி ஆணையர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஆந்திரா மாநிலம், கோதாவரியில் உள்ளது புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம்.
இங்கு, கடந்த 2021ம் ஆண்டு ஏனாம் நகராட்சி அனுமதியுடன் ஒரு சூதாட்ட கிளப் துவக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் அனுமதியின்றி 5 சூதாட்ட கிளப்கள்துவங்கின.
இதனால் தொகுதி எம்.எல்.ஏ., மற்றும் முன்னாள் அமைச்சருக்கும் இடையே மோதல் வெடித்ததை தொடர்ந்து மண்டல அதிகாரி உத்தரவின்பேரில் 6 கிளப்களும் கடந்த 2022 பிப்., மாதம் மூடப்பட்டன.
ராயல் கிளப் கோர்ட் அனுமதி பெற்று திறக்கப்பட்டது. மற்ற கிளப்கள் கோர்ட்டை அணுகியபோது, நகராட்சி அனுமதி பெற்று திறக்கலாம் என தெரிவித்தது. இந்நிலையில், கடந்த நவ., மாதம் ராயல் கிளப்பிற்கு நகராட்சி வழங்கிய அனுமதியை ரத்து செய்ய முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
ஆனால், நகராட்சி ஆணையர் அருள்பிரகாசம் விடுமுறையில் சென்றுவிட்டார். அதனால் போலீசார், நகராட்சி மேலாளர் மூலம் சூதாட்ட கிளப்பிற்கு 'சீல்' வைத்தனர்.
இந்நிலையில் விடுமுறையை ரத்து செய்து, மறுநாள் பணிக்கு வந்த அருள்பிரகாசம், 2023-24ம் ஆண்டிற்கு கிளப் லைசன்ஸ் புதுப்பிக்க அனுமதி அளித்தார். அதற்கு கிளப் நிர்வாகம் நகராட்சிக்கு செலுத்திய ரூ. 15,500 காசோலையை, நகராட்சி பெயரில் டிபாசிட் செய்யாமல் அலுவலகத்தில் வைத்திருந்தார்.
இதையறிந்த மண்டல நிர்வாக அதிகாரி முனிசாமி, சூதாட்ட கிளப்பிற்கு நகராட்சி வழங்கிய அனுமதியை ரத்து செய்து மூடினார். மேலும், முதல்வர் உத்தரவை மீறி அனுமதி வழங்கியது குறித்து விசாரணை நடத்தினார்.
அதில், நகராட்சி ஆணையர் அருள்பிரகாசம், சூதாட்ட கிளப்பிற்கு முறைகேடாக அனுமதி வழங்கியது தெரிய வந்ததை தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார்.
அதனையேற்று உள்ளாட்சித்துறை செயலர் வல்லவன், ஏனாம் நகராட்சி ஆணையர் அருள்பிரகாசத்தை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார். மேலும், அவர் அனுமதியின்றி புதுச்சேரியை விட்டு வெளியே செல்ல தடை விதித்துள்ளார்.

