/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்தலுக்கு தொகுதியை உறுதி செய்த நமச்சிவாயம்
/
தேர்தலுக்கு தொகுதியை உறுதி செய்த நமச்சிவாயம்
ADDED : மே 31, 2025 11:44 PM
வில்லியனுார், மணவெளியை சேர்ந்தவர் அமைச்சர் நமச்சிவாயம், இவரது அரசியல் பயணம் துவங்கியது முதல் வில்லியனுார் தொகுதியிலேயே போட்டியிட்டு வெற்றி பெற்று, அமைச்சராகி வந்தார். காங்., கட்சியில் இருந்த அவர், கடந்த தேர்தலின்போது, பா.ஜ., வில் இணைந்தார்.
வில்லியனுார் தொகுதியில் இஸ்லாமியர்கள் ஓட்டு அதிகம் உள்ளதால், உஷாராக மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு மாறி நமச்சிவாயம், அங்கேயே தங்கி தேர்தலில் களம் கண்டு வெற்றி பெற்று அமைச்சராக உள்ளார்.
வெற்றிக்கு பின், தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அவ்வப்போது வந்து சென்றதால், தொகுதி மக்களிடம் நெருக்கம் குறைந்தது. இதன் காரணமாக கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட நமச்சிவாயத்திற்கு, அவரது சொந்த தொகுதியான மண்ணாடிப்பட்டில், காங்., கட்சியை விட குறைவாகவே ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார்.
மக்களின் மன ஓட்டத்தை அறிந்து உஷாரான நமச்சிவாயம், மீண்டும் தொகுதியில் வலம் வர துவங்கியுள்ளார்.
மேலும், வரும் 2026ம் சட்டசபை தேர்தலில் மீண்டும் மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ள அவர், அதற்காக, திருக்கனுாரில் புதிதாக கட்டப்பட்ட வீட்டில் குடியேறியுள்ளார். மேலும், பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து வருகிறார்.
மேலும், மக்களின் நம்பிக்கையை பெற்றிட, தனது மற்றும் தனது குடும்பத்தாரின் ஓட்டுகளை திருக்கனுார் தொகுதிக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த 100 நாள் வேலை திட்ட துவக்க விழாவில் பங்கேற்ற அமைச்சரிடம், பொதுமக்கள் 'உங்களை நேரில் பார்க்கவே முடியவில்லையே' என்றதும், இனி நான் தொகுதியில் தான் இருக்கப் போகிறேன். அதற்காக எனது குடும்ப ஓட்டுகளை திருக்கனுார் தொகுதிக்கு மாற்ற எழுதி கொடுத்துள்ளேன்' என்றார்.
இதன் மூலம், வரும் சட்டசபை தேர்தலில் அமைச்சர் நமச்சிவாயம் மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.