/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிற்சாலைக்கு நிலம் ஒதுக்குவதில் ஊழல் நாராயணசாமி பகீர் குற்றச்சாட்டு
/
தொழிற்சாலைக்கு நிலம் ஒதுக்குவதில் ஊழல் நாராயணசாமி பகீர் குற்றச்சாட்டு
தொழிற்சாலைக்கு நிலம் ஒதுக்குவதில் ஊழல் நாராயணசாமி பகீர் குற்றச்சாட்டு
தொழிற்சாலைக்கு நிலம் ஒதுக்குவதில் ஊழல் நாராயணசாமி பகீர் குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 15, 2025 05:43 AM
புதுச்சேரி : மத்திய அரசு நிர்வாக ரீதியிலும், நிதி அளிப்பதிலும் புதுச்சேரியை புறக்கணித்து வருவதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அவர், கூறியதாவது:
புதுச்சேரிக்கு வந்த மத்திய இணை அமைச்சர் முருகன், மத்திய அரசின் 11 ஆண்டு கால சாதனைகள் குறித்து பேசினார்.
இந்த ஆட்சியில், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், துறைமுகம், விமான நிலையங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்தது தான் சாதனை. காங்., ஆட்சியில் 9 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, தற்போது 6.5 சதவீதமாக குறைந்துள்ளது.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருவதாக கூறுவது அப்பட்டமான பொய். முதல்வர் ரங்கசாமி மாநில அந்தஸ்து கேட்டார். கொடுத்தீர்களா? மத்திய அரசு, நிர்வாக ரீதியிலும், நிதி கொடுப்பதிலும் புதுச்சேரியை புறக்கணித்து வருகிறது.
முதல்வர் ரங்கசாமி அறிவித்த திட்டங்கள் பேப்பரில் இருக்கின்றதே தவிர முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இதுகுறித்து ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க பா.ஜ., தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் தயாரா?
இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் பங்கேற்ற கவர்னர் கைலாஷ்நாதன் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒதுக்கப்பட்ட 50 ஏக்கர் நிலத்தை மீண்டும் ஜிப்மரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் கடந்த காங்., அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு மாறாக சேதராப்பட்டில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையத்தை வரவிடாமல் இந்த அரசு தடுத்துள்ளது தெரிய வருகிறது.
முதல்வர் ரங்கசாமி கருத்து வேறுபாடு காரணமாக திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில் கவர்னரை அவமதித்துள்ளார். இதற்கு, முதல்வர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
கவர்னரும், முதல்வரும் புதுச்சேரிக்கு நிறைய தொழிற்சாலைகள் வர வேண்டும் என்கின்றனர். ஆனால், தொழிற்சாலைக்கு நிலம் ஒதுக்குவதில் ஊழல் நடக்கிறது. காங்., ஆட்சியில் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டத்தை கொண்டு வந்தோம். இந்த ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக அதற்கான தொகை ஒதுக்காததால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கட்சித் தலைமை விரும்பினால் வரும் தேர்தலில் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளும் நான் போட்டியிட தயார். தேர்தலின் போது யார்? நிற்க விரும்பினாலும் அவர்களுக்கு கட்சிக்குள்ளே எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும். இதை பெரிதுப்படுத்த தேவையில்லை' என்றார்.