/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய கல்வி மாநாடு விழிப்புணர்வு ஊர்வலம்
/
தேசிய கல்வி மாநாடு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : நவ 22, 2024 05:39 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய கல்வி மாநாடு துவங்குவதையொட்டி மாணவர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
புதுச்சேரி பல்கலைக்கழகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம் ஆகியன சார்பில், தேசிய கல்வி மாநாடு 'ஞான கும்பமேளா' என்ற தலைப்பில் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களில் புதுச்சேரி பல்கலைக் கழக மரபு மற்றும் பண்பாட்டு கலையரங்கில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையொட்டி, சின்னக்காலாப்பட்டு ஓட்டல் அசோக் எதிரில் மாணவர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., கல்வி மேம்பாட்டு கேந்திர அமைப்பின் தேசிய செயலாளர் அதுல் கோத்தாரி ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். மங்கள வாத்தியங்கள் முழங்க சின்னக்காலாப்பட்டு, இ.சி.ஆர்., வழியாக சென்ற ஊர்வலம் பிள்ளைச்சாவடி, புதுச்சேரி பல்கலைக்கழக மரபு மற்றும் பண்பாட்டு கலையரங்கம் எதிரே நிறைவடைந்தது.
புதுடில்லியில் அடுத்தாண்டு பிப்., 5 முதல் 9ம் தேதி வரை நடக்க உள்ள உலக ஒலி - ஒளி பொழுதுபோக்கு உச்சி மாநாடான வேவ்ஸ் மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாநாட்டில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் பாரதிய அறிவு முறை கண்காட்சியினை சபாநாயகர் செல்வம் திறந்து வைத்து, பார்வையிட்டார். தென்னிந்திய அளவில் கல்வி நிறுவனங்கள் பங்கேற்றுள்ள இந்த கண்காட்சியில் இடம்பெற்ற கைத்தறி உள்ளிட்ட கலை படைப்புகள் பார்வையாளர்களை கவர்ந்தது.
தமிழ்நாடு விவேகானந்தா கல்லுாரி முன்னாள் முதல்வர் வன்னியராஜன், கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழக முன்னாள் பேராசியர் நந்தகுமார் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்றனர். இன்று 22ம் தேதி நடக்கும் மாநாட்டின் துவக்க விழாவில், கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் தரணிக்கரசு பங்கேற்கின்றனர்.