புது கொள்கை வெளியீடு கிராமப்புற குடிநீர் திட்டத்திற்கு... பழைய அரசாணை திடீர் ரத்து
புது கொள்கை வெளியீடு கிராமப்புற குடிநீர் திட்டத்திற்கு... பழைய அரசாணை திடீர் ரத்து
ADDED : செப் 27, 2026 05:31 PM

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கிராமப்புற மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் பொருட்டு, அரசு புதிய குடிநீர் விநியோக இயக்க மற்றும் பராமரிப்புக் கொள்கையை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் 2.0 வழிகாட்டுதல்களின் கீழ் திருத்தப்பட்ட இப்புதிய கொள்கையானது, 31.12.2024 தேதி வெளியான பழைய அரசாணையை முற்றிலும் ரத்து செய்து, நடைமுறைக்கு வருகிறது.
மாநில மக்கள் தொகையான 12.44 லட்சத்தில் 32 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். நிலத்தடி நீர் உப்புத்தன்மை அடைதல், கடல்நீர் ஊடுருவல், வறட்சி, வெள்ளப்பெருக்கு மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற தீவிர நீர் மேலாண்மை சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், கிராமப்புறக் குடிநீர் அமைப்புகளின் கட்டமைப்பு மற்றும் தொடர் பராமரிப்பை வலுப்படுத்துவது இக்கொள்கையின் முதன்மை நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் முக்கிய அம்சங்கள்:: குடிநீர் திட்டங்களின் வகைப்பாடு: கிராமப்புறப் பகுதிகளுக்கான குடிநீர் விநியோகம் தனி கிராம திட்டம், பல கிராம கூட்டு திட்டம் என இரண்டு முக்கிய திட்ட முறைகளின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. தனி கிராமத் திட்டத்தினை பொருத்தவரை கிராம பஞ்சாயத்தின் எல்லைக்குள்ளேயே கிடைக்கக்கூடிய உள்ளூர் நிலத்தடி நீர் ஆதாரங்களைப் ஆழ்துளை கிணறுகள் அல்லது திறந்தவெளி கிணறுகள் பயன்படுத்தி, அக்கிராம குடியிருப்பு மக்களுக்கு மட்டும் குடிநீர் விநியோகிக்கும் சிறிய உள்கட்டமைப்பு திட்டமாகும்.
பல கிராமக் கூட்டுத் திட்டத்தினை பொருத்தவரை ஒரு குறிப்பிட்ட கிராமத்திற்குள் போதுமான அல்லது நம்பகமான நீர் ஆதாரம் இல்லாத சூழலில், தொலைதுார ஆற்றுப்படுகைகள் அல்லது பெரிய நிலத்தடி நீர் ஆதாரங்களில் இருந்து உந்து குழாய்கள் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு, பல கிராம பஞ்சாயத்துகளுக்கு விநியோகிக்கப்படும் பெருந்திட்டமாகும்.
டிஜிட்டல் தொழில்நுட்பம்: கிராமங்களில் விநியோகிக்கப்படும் நீரின் அளவைக் துல்லியமாகக் கணக்கிட ஐ.ஓ.டி., அடிப்படையிலான டிஜிட்டல் மீட்டர்கள் நிறுவப்பட்டு, கிளவுடு தொழில்நுட்பம் மற்றும் முக்கிய அமைப்புகள் மூலமாக மாநில அளவில் அமைக்கப்படும் ஒருங்கிணைந்த மையத்திற்கு தரவுகள் இணைக்கப்படும்.
சொத்து வரைபடமாக்கம்:: குடிநீர் உள்கட்டமைப்பு சார்ந்த விவரங்கள் பி.எம் கதி சக்தி இணையதளம் மற்றும் சுஜலாம் பாரத் செயலி வாயிலாக ஜி.எஸ்.ஐ., வரைபடமாக்கம் செய்யப்படும்.
நிதி மேலாண்மை:: இக்கொள்கையானது குடிநீர் அமைப்புகளின் இயக்கச் செலவை ஈடுகட்டவும், திட்டங்களை நிதி ரீதியாகச் சுயசார்புடையதாக மாற்றவும் முறையான கட்டண அமைப்பை வலியுறுத்துகிறது. வீட்டு உபயோக மீட்டர்களுக்கான கட்டணம்: காலாண்டிற்கு 90 அலகுகள் வரை பயன்பாட்டிற்கு அலகு(யூனிட்) ஒன்றிற்கு ரூ. 3.00 குறைந்தபட்சக் கட்டணம் ரூ. 270 வசூலிக்கப்படும். 90 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் ஒவ்வொரு கூடுதல் அலகுக்கும் ரூ. 5.00 செலுத்த வேண்டும்.
மீட்டர் இல்லாத வீடுகளுக்கான கட்டணம்:: சேமிப்புத் தொட்டி இல்லாத வீடுகளுக்கு மாதம் ரூ. 90.00 மற்றும் சேமிப்புத் தொட்டி உள்ள வீடுகளுக்கு மாதம் ரூ. 120.00 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு கட்டடங்கள்: காலாண்டிற்கு 90 அலகுகள் வரை அலகு ஒன்றிற்கு ரூ. 8.00 வீதம் குறைந்தபட்சம் ரூ. 720-ம், 90 அலகுகளுக்கு மேல் பயன்பாட்டிற்கு கூடுதல் அலகுக்கு ரூ. 10.00-ம் வசூலிக்கப்படும்.
வணிக நிறுவனங்கள்:: வர்த்தக விடுதிகள், ஓட்டல்கள் மற்றும் திரையரங்குகளுக்குக் காலாண்டிற்கு 100 அலகுகள் வரை அலகுக்கு ரூ. 15.00 வீதம் குறைந்தபட்சம் ரூ. 1,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதர நிபந்தனைகள்:: குடிநீர் குழாய் மறுஇணைப்புக்கு ரூ. 2,000-ம், புதிய இணைப்பு ஆய்வு கட்டணமாக ரூ. 1,000-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், வீடுகளுக்குத் திரும்பப்பெற முடியாத ஒருமுறை வைப்புத் தொகையாக ரூ. 500-ம், வணிக நிறுவனங்களுக்கு ரூ. 10,000-ம் பெறப்படும். முக்கியமாக, கட்டடக் கட்டுமானப் பணிகளுக்குக் குடிநீரைப் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியின் கிராமப்புறங்களுக்குத் தடையற்ற, பாதுகாப்பான குடிநீரை நீண்டகால அடிப்படையில் வழங்குவதில் இக்கொள்கை முக்கிய பங்கு வகிக்கும்.
குறைதீர்வு எப்படி பொதுமக்கள் குடிநீர் விநியோகம் தொடர்பான புகார்களை உடனடியாகப் பதிவு செய்ய மொபைல் செயலி மற்றும் மாவட்ட குறைதீர்ப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும். புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கடுமையான சேவை நேர வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வீடுகளுக்கான குடிநீர் விநியோகமின்மை அல்லது விநியோகக் குழாய் கசிவுகளுக்கு 24 மணி நேரத்திற்குள் தீர்வு காணப்பட வேண்டும். பிரதான உந்து குழாய்கள், சேமிப்புத் தொட்டி உடைப்புகள் அல்லது மின் மோட்டார் கோளாறுகள் 48 மணி நேரத்திற்குள் சரிசெய்யப்பட வேண்டும். அதுவரை மாற்று நீர் விநியோக ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். குடிநீர் தரம் சார்ந்த புகார்களின் மீது 24 மணி நேரத்திற்குள் மாதிரி எடுக்கப்பட்டு, உடனடி மாற்று குடிநீர் வழங்கி, பரிசோதனை முடிவுக்குப் பின்னரே பழைய விநியோகம் சீரமைக்கப்படும். புதிய குடிநீர் இணைப்புக் கோருதல் மற்றும் கட்டண சார்ந்த புகார்கள் 15 நாட்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும்.
