/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சொத்து வாங்கும்போது பட்டா மாற்றம் செய்வதற்கு புதிய நடைமுறை: மக்களின் நீண்ட கால பிரச்னைக்கு விடிவுகாலம்
/
சொத்து வாங்கும்போது பட்டா மாற்றம் செய்வதற்கு புதிய நடைமுறை: மக்களின் நீண்ட கால பிரச்னைக்கு விடிவுகாலம்
சொத்து வாங்கும்போது பட்டா மாற்றம் செய்வதற்கு புதிய நடைமுறை: மக்களின் நீண்ட கால பிரச்னைக்கு விடிவுகாலம்
சொத்து வாங்கும்போது பட்டா மாற்றம் செய்வதற்கு புதிய நடைமுறை: மக்களின் நீண்ட கால பிரச்னைக்கு விடிவுகாலம்
ADDED : அக் 18, 2024 06:27 AM

புதுச்சேரி: சொத்து வாங்கும்போதே பட்டா மாற்றம் செய்யும் புதிய நடைமுறையை அமல்படுத்த நில அளவை துறைதயாராகி வருகிறது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
புதுச்சேரியில் விளை நிலங்கள் வேகமாக மனைப்பிரிவுகளாக மாறி வருகின்றன. புதிய மனைப் பிரிவுகளில் கட்டப்படும் வீடுகளுக்கு கடன் வசதி, சொத்து உரிமை, கட்டட அனுமதி, உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக, கிரையம் செய்யப்படும் மனைப்பிரிவுகளுக்கு பட்டா பெற வேண்டியது அவசியமாகிறது.
அதேபோல, பூர்வீக குடும்ப சொத்துக்களை குடும்ப உறுப்பினர்களுக்கு பிரித்துக் கொடுக்கும் நடைமுறை தொன்று தொட்டு இருந்து வருகிறது.
அப்படி பாகப் பிரிவினை செய்யப்படும் சொத்துக்களுக்கு, புதிதாக உரிமை கொண்டாடுபவர்கள் அரசிடம் விண்ணப்பித்து, முறையாக பட்டா பெற வேண்டிய நிலை உள்ளது.
ஆனால், புதுச்சேரியில் பட்டா மாற்றம் என்பது அவ்வளவு எளிதில் நடக்கக் கூடிய காரியமாக இல்லை. தமிழகத்தில் வெகு சுலபமாக பட்டா மாற்றம் செய்யப்படும் சூழ்நிலையில், புதுச்சேரியில் பல ஆண்டுகள் அலைந்தாலும் பட்டா கிடைத்து விடாது. ஆட்கள் பற்றாக்குறை, நடைமுறை சிக்கல் என பல்வேறு காரணங்களை பட்டியலிட்டு, தட்டி கழித்துவிடுவர்.
இதற்கிடையில், புதுச்சேரியில் சொத்து வாங்குபோதே பட்டா மாற்றம் செய்ய வருவாய் துறையின் கீழ் உள்ள நில அளவை துறை தயாராகி வருகிறது.
இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. வருவாய் துறை அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.
சொத்து விற்பனை செய்பவரின் பெயரில் பட்டா இருந்தால் மட்டும் போதும். பத்திர பதிவு செய்யும்போதே இணைதளத்தில் பட்டா மாற்றத்திற்கான இணைய பக்கத்தினை தேர்வு செய்து விண்ணப்பித்துவிடலாம்.
சொத்து வாங்கிய அடுத்த 20 நாட்களுக்குள் பட்டா வாங்குபவரின் பெயருக்கு மாற்றப்பட்டு விடும். இதற்கான தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
அப்பாடா....
தற்போது புதுச்சேரி மாநிலத்தில் ஒருவர் தனி பட்டா பெற வேண்டுமென்றால் குதிரைக்கொம்பு. பழங்கால சட்டத்தையே இதுவரை பின்பற்றி வருவதால், மனுதாரருக்கு பட்டா கிடைக்க பல ஆண்டுகள் ஆகிறது.
நிலஅளவைத் துறை இயக்குனரிடம் கொடுக்கப்படும் மனு, வருவாய் ஆய்வாளர், துணை தாசில்தார், தாசில்தார், நில அளவைத்துறை உதவி இயக்குனர், நில அளவையர் என மாறி மாறி பைல் சுற்றி வரவேண்டியுள்ளது.
ஒவ்வொரு அதிகாரியும், பல மாதங்கள் வரை பைலை கிடப்பில் போடுகின்றனர். இந்த பைலில் ஏதாவது குறையிருந்தால், அதற்கான காரணத்தைக் கூறி திருப்பியும் அனுப்பப்படுவதில்லை.
இதனால் பட்டா மாற்றம் வேண்டி மனு செய்துவிட்டு, 2 ஆண்டுகளுக்கு மேல் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நடையாய் நடக்க வேண்டி இருப்பதாக, பாதிக்கப்பட்டவர்கள் புலம்பி வந்தனர்.
இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி உத்தரவின்பேரில், நில அளவை துறை கொண்டு வர புதிய மாற்றம் பட்டா மாற்ற நடைமுறைகளை எளிமையாக்க உள்ளதோடு, மக்களின் நீண்ட கால பிரச்னைக்கும் விடிவுகாலம் பிறந்துள்ளது.