/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புத்தாண்டு கொண்டாட்டம்: விபத்தில் 2 பேர் பலி; 57 பேர் காயம்
/
புத்தாண்டு கொண்டாட்டம்: விபத்தில் 2 பேர் பலி; 57 பேர் காயம்
புத்தாண்டு கொண்டாட்டம்: விபத்தில் 2 பேர் பலி; 57 பேர் காயம்
புத்தாண்டு கொண்டாட்டம்: விபத்தில் 2 பேர் பலி; 57 பேர் காயம்
ADDED : ஜன 02, 2025 06:39 AM

புதுச்சேரி: புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து வீடு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 57 பேர் காயம் அடைந்தனர்.
புதுச்சேரியில் நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரை சாலையில் கூடி புத்தாண்டை கொண்டாடினர். பலர் ஓட்டல்கள், பார், ரிசார்ட்டுகளில் ஆட்டம் பாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து அனைவரும் நள்ளிரவு வீடு திரும்பினர்.
விபத்துக்கள் நடக்காமலும், போக்குவரத்து பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க போலீசார் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இருந்தும் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து திரும்பிய பலர் விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர்.
புதுச்சேரி முத்திரைப்பாளையம், நெல்லுமண்டி வீதியைச் சேர்ந்தவர் அருள்பாண்டியன், 33; நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாடிவிட்டு தனது பைக்கில் வீடு திரும்பினார். இரவு 2:00 மணிக்கு திலாஸ்பேட்டை போலீஸ் மைதானம், சிமெண்ட் சாலை வழியாக சென்றார்.
போலீஸ் சமுதாய கூடம் அருகே சென்றபோது, சாலையோர வாய்க்காலில் தவறி விழுந்து காயமடைந்தார்.
அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சில மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதேபோல் அரியூர், ஆனந்தபுரம் சாலை துரைராஜ் மகன் தேவராஜ், 21; தனது நண்பருடன் கோட்டக்குப்பம் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாடிய பின்பு இருவரும் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இ.சி.ஆர்., கருவடிக்குப்பம் சிவாஜி சிலை அருகே சென்டர் மீடியனில் பைக் மோதியதில் பாலாஜி கிழே விழுந்தார். படுகாயம் அடைந்த பாலாஜி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இரு விபத்துக்கள் குறித்தும் வடக்கு போக்குவரத்து போலீசார் தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து திரும்பும் போது புதுச்சேரி முழுதும் ஏராளமான இடங்களில் விபத்து நடந்தது. வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 20 இடங்களில் விபத்து ஏற்பட்டு காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபோல் கிழக்கு போக்குவரத்து பிரிவில் 23 விபத்துக்கள் அரங்கேறி உள்ளது. கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து பிரிவில் 11 விபத்துகள் நடந்துள்ளது.
வில்லியனுார் மேற்கு போக்குவரத்து போலீசில் 3 விபத்துக்களில் மூவர் காயம் அடைந்தனர்.
ஒட்டுமொத்தமாக புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மட்டும் 57 பேர்விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர்.இதில் பெரும்பலான விபத்துக்கள் குடிபோதையில் தனக்கு தானே கீழே விழுந்து காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.