UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 04:56 PM
புதுச்சேரி: உழவர்கரை சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் இல்லாததால் பத்திரப்பதிவு பணி தேக்கமடைந்து வருகிறது.
புதுச்சேரியில் உள்ள உழவர்கரை சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் சார் பதிவாளர் மணிமாறன், கடந்த 1ம் தேதி முதல் இன்று 6ம் தேதி வரை விடுப்பில் சென்றார்.
அவருக்கு பதிலாக புதுச்சேரி முதன்மை பதிவாளர் அலுவலகத்திலிருந்து மாற்று அதிகாரி, அன்று மாலை 4:30 மணிக்கே உழவர்கரை சார் பதிவாளர் அலுவலகம் வந்தவர் 4 பத்திரங்களை மட்டும் பதிவு செய்தார்.
அடுத்து மூன்று நாட்கள் அரசு விடுமுறை என்பதால், வாரத்தின் முதல் நாளான நேற்று வழக்கம் போல் பத்திர பதிவு செய்ய ஏராளமானோர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
ஆனால், பொறுப்பு அதிகாரி யாரும் வராததால் 20 முதல் 25 பேர் வரை பத்திரப் பதிவுக்காக வந்திருந்து அலுவலகத்தில் மாலை வரை காத்திருந்தனர். இதனால், அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்வதில் தேக்கமடைந்தன.
புதுச்சேரி மாநிலத்திற்கு வருவாய் தரும் துறைகள் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ள பத்திர பதிவு துறையில், சார் பதிவாளர் இல்லாததால் பத்திர பதிவு முடங்குவதுடன், மாநில வருவாயும் பாதிக்கப்பட்டு வருகிறது.
