ADDED : ஜூன் 04, 2026 03:31 AM

புதுச்சேரி: புதுச்சேரி சுகாதாரத்துறை, தேசிய சுகாதார இயக்கம், தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம் (அரசு மார்பு நோய் நிலையம்) மற்றும் பல் மருத்துவ கல்லுாரிகள் சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
இந்தாண்டு உலக புகையிலை ஒழிப்பு தின கருப்பொருளானது 'புகையிலையின் கவர்ச்சியான முகமூடியை வெளிப்படுத்துதல்: நிகோடின் மற்றும் புகையிலை அடிமைத்தனத்தை எதிர்த்தல்' ஆகும். இதனையொட்டி, நேற்று புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் கம்பன் கலையரங்கம் வளாகத்தில் ஆரம்பித்து கடற்கரை காந்தி சிலை வரை நடைப்பெற்றது. ஊர்வலத்தை சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள் துவக்கி வைத்தார்.
மாநில புகையிலை கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேஷ், புகையிலை கட்டுப்பாட்டு மாநில ஆலோசகர் சூரியகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மணிமாறன், சிவஷண்முகம் ஆகியோர் செய்திருந்தனர். ஊர்வலத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு, புகையிலையினால் ஏற்படக் கூடிய நுரையீரல் புற்றுநோய், வாய் மற்றும் தொண்டை புற்றுநோய், இதய நோய்கள், பக்கவாதம் நாட்பட்ட சுவாச நோய்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.
