/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுகாதார ஊழியர் சம்மேளனம் போராட்ட அறிவிப்பு
/
சுகாதார ஊழியர் சம்மேளனம் போராட்ட அறிவிப்பு
ADDED : பிப் 14, 2024 03:35 AM
புதுச்சேரி : கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 21ம் தேதி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என, சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் செயற்குழு கூட்டம், அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் நடந்தது.
பொதுச்செயலாளர் முனுசாமி தலைமை தாங்கினார். சம்மேளன கவுரவ தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், துணை பொதுச்செயலாளர் இளங்கோவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் கோரிக்கைகள் மற்றும் இணைப்பு சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வலியுறுத்தி சுகாதாரத்துறை செயலருக்கு கடிதம் அளிப்பது, கோரிக்கைகளை விரைவாக தீர்க்க வலியுறுத்தி, வரும் 21ம் தேதி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, 7வது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில் உயர்த்தப்பட்ட நோயாளி கவனிப்பு படி மற்றும் நர்சிங் அலவன்ஸ் நிலுவை தொகையை வழங்குவது, பதவி உயர்வு மூலம் காலி பதவிகளை நிரப்புவது உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க அரசை வலியுறுத்தி, அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில், வரும் 28ம் தேதி நடக்கும் பேரணியில் பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் அமைப்பு செயலாளர்கள் மணிவாணன், ஜெகநாதன், துணை தலைவர்கள் விநாயகம், வெற்றிவேல், செயலாளர்கள் கலைவாணி, சதீஷ்குமார், பிரகதீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சுகாதார ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் பொருளாளர் கிரி நன்றி கூறினார்.

