/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார் அருகே பிரபல ரவுடி கைது
/
வில்லியனுார் அருகே பிரபல ரவுடி கைது
ADDED : அக் 27, 2025 12:23 AM

வில்லியனுார்: வில்லியனுார் அருகே வழிப்பறியில் ஈடுபட திட்டம் தீட்டி காத்திருந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் மேற்கு எஸ்.பி சுப்பிரமணியன் உத்தரவின் பேரில் வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் இரவு பத்துக்கண்ணு பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது தொண்டமாநத்தம் சாலையில் சென்றபோது போலீசாரை கண்டு ஒருவர் தப்பிச்செல்ல முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்தபோது, அவர் கத்தி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
விசாரணையில் சோரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மகன் சாத்தராக்,36; என தெரியவந்தது. இவர் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு ஸ்டேஷன்களில் கொலை, கொள்ளை, திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
மேலும் இவர் தொண்டமாநத்தம் பகுதியில் இரவு நேரத்தில் வழிப்பறி செய்வதற்கு திட்டம் தீட்டி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் காத்திருந்தது விசாரணையில் தெரிந்தது. அதனை தொடர்ந்து வில்லியனுார் போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

