/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் என்.ஆர்.ஐ., சீட் ஒதுக்கீடு மோசடி; 30 ஏஜென்டுகளை பிடிக்க 2 தனிப்படை தீவிரம்
/
எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் என்.ஆர்.ஐ., சீட் ஒதுக்கீடு மோசடி; 30 ஏஜென்டுகளை பிடிக்க 2 தனிப்படை தீவிரம்
எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் என்.ஆர்.ஐ., சீட் ஒதுக்கீடு மோசடி; 30 ஏஜென்டுகளை பிடிக்க 2 தனிப்படை தீவிரம்
எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் என்.ஆர்.ஐ., சீட் ஒதுக்கீடு மோசடி; 30 ஏஜென்டுகளை பிடிக்க 2 தனிப்படை தீவிரம்
ADDED : பிப் 06, 2025 07:02 AM

புதுச்சேரி; எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் என்.ஆர்.ஐ., ஒதுக்கீடு சீட் மோசடி வழக்கில் தொடர்புடைய 30 ஏஜென்ட்களை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை துவங்கி உள்ளது.
புதுச்சேரியில் அரசு மருத்துவ கல்லுாரி, 3 சுயநிதி மருத்துவ கல்லுாரி உள்ளது. இதில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு சென்டாக் மூலம் சேர்க்கை நடக்கிறது.
எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.,) மற்றும் என்.ஆர்.ஐ., ஸ்பான்சர் பிரிவில் 15 சதவீதம் இடஒதுக்கீடு அடிப்படையில் 116 எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்படுகிறது.
இந்த எம்.பி.பி.எஸ்., இடங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாடு வாழ் இந்திய ஸ்பான்சர் ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்று படிக்கலாம். நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறும் பலர், ஏஜென்ட் மூலம் போலியான வெளிநாடு துாதரக ஆவணங்களை தாக்கல் செய்து, என்.ஆர்.ஐ., ஸ்பான்சர் ஒதுக்கீடு மருத்துவ இடங்களை பெறுவதாக புகார் எழுந்தது.
மருத்துவ சேர்க்கைக்கு கொடுத்த ஆவணங்களை பரிசோதித்தபோது, 74 ஆவணங்கள் போலியானது என தெரியவந்தது. இதனால் 74 மாணவர்களுக்கு வழங்கிய எம்.பி.பி.எஸ்., சேர்க்கை ரத்து செய்யப்பட்டது.
மோசடியை கண்டறிந்த சென்டாக் ஒருங்கிணைப்பாளர் லாஸ்பேட்டை போலீசில் கடந்த செப்., மாதம் புகார் அளித்தார். போலீசார் மோசடி வழக்கு பதிந்து போலி ஆவணம் சமர்ப்பித்த மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.
துாதரகம் பெயரில் போலி ஆவணங்கள் கொடுத்த ஏஜென்ட்கள் ஆந்திரா குண்டூர் மெட்டி சுப்பாராவ், தேனி மாவட்டம் பூமிநாதன், செல்வகுமார், கார்லோஸ் சாஜிவ், விநாயகம் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர் விசாரணையில், வெளிநாடு துாதரக போலி ஆவணங்கள் கன்னியாக்குமரியை தலைமை இடமாக கொண்டு 30க்கும் மேற்பட்ட ஏஜென்ட்கள் தயாரித்து கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. 30 ஏஜென்ட்டுகள் கைது செய்ய சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில், 2 குழுக்களாக பிரிந்து கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இந்த சிறப்பு அதிரடிப்படையினர் சென்னை, கன்னியாக்குமரி உள்ளிட்ட இடங்களுக்கு விரைந்துள்ளனர்.