/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழகத்தில் என்.ஆர்.காங்., போட்டியிட முடிவு: முதல்வர் ரங்கசாமி திடீர் அறிவிப்பு
/
தமிழகத்தில் என்.ஆர்.காங்., போட்டியிட முடிவு: முதல்வர் ரங்கசாமி திடீர் அறிவிப்பு
தமிழகத்தில் என்.ஆர்.காங்., போட்டியிட முடிவு: முதல்வர் ரங்கசாமி திடீர் அறிவிப்பு
தமிழகத்தில் என்.ஆர்.காங்., போட்டியிட முடிவு: முதல்வர் ரங்கசாமி திடீர் அறிவிப்பு
ADDED : பிப் 08, 2025 06:08 AM

புதுச்சேரி: சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் என்.ஆர் காங்., போட்டியிடும் என, அக்கட்சி தலைவரும் முதல்வருமான ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. காங்., கட்சியில் இருந்து வெளியேறிய முதல்வர் ரங்கசாமி, 2011ம் ஆண்டு பிப்., 7ம் தேதி, என்.ஆர்.காங்., என்ற தனிக்கட்சியை துவக்கினார். என். ரங்கசாமி என்ற அவரின் பெயரில் கட்சி துவக்கியதாக விமர்சனங்கள் எழுந்தது. ஆனால், என்.ஆர்.காங்., என்பது அகில இந்திய நமது ராஜ்ஜியம் என, ரங்கசாமி விளக்கம் தந்தார்.
என்.ஆர்.காங்., இதுவரையில், புதுச்சேரியில் மட்டுமே போட்டியிட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று புதுச்சேரியில் நடந்த என்.ஆர்., காங்., 15வது ஆண்டு விழாவில், வரும் சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் என்.ஆர்.காங்., போட்டியிடும் என அக்கட்சி தலைவர் ரங்கசாமி, தனது கட்சியினர் மத்தியில் அதிரடியாக அறிவித்தார்.
இது குறித்து அவர் கூறும்போது, 'என்.ஆர்.காங்., தமிழகத்திலும் கால் பதிக்க வேண்டும் என, பல தரப்பில் இருந்து கோரிக்கை விடுத்தனர். தமிழகத்திலும் காமராஜர் கொள்கையை கொண்டுவர வேண்டும் என, அவர்கள் விரும்புகின்றனர்.
இதனால் வரும் சட்டசபை தேர்தலில் தமிழக தொகுதிகளிலும் என்.ஆர்.காங்., போட்டியிடும். காமராஜரின் எண்ணங்களை, செயல்பாடுகளை கருத்தாக கொண்டு திட்டங்களை செயல்படுவோம்' என்றார்.
ரங்கசாமியின் கணக்கு என்ன
நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை துவங்கி, முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தினார்.
இந்த மாநாடு ஏற்பாடுகளை முன்னின்று செய்தவர் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த். விஜயின் நம்பிக்கைக்கு உரியவரான இவர், புதுச்சேரியை சேர்ந்தவர். புஸ்ஸி தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும் இருந்தவர். இதனால், தமிழகத்துடன், புதுச்சேரியிலும் த.வெ.க., வை பலப்படுத்தி, வரும் 2026 சட்டசபை தேர்தலில், புதுச்சேரியிலும் போட்டியில் இறங்க, புஸ்சி ஆனந்திடம் அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
நடிகர் விஜய், கட்சி ஆரம்பிப்பதற்கு முன் புதுச்சேரி வந்து முதல்வர் ரங்கசாமியிடம் ஆசீர்வாதம் பெற்று சென்றார். மாநாடு முடிந்த கையோடு, விஜய்க்கு, முதல்வர் ரங்கசாமி வாழ்த்தும் தெரிவித்தார்.
புதுச்சேரியில் வரும் சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., -த.வெ.க., கூட்டணி அமைப்பதற்கான அச்சாரம் போடப்பட்டு வருகிறது. எனவே, புதுச்சேரியில் என்.ஆர்.காங்.,- த.வெ.க.,வுடன் கூட்டணி மலரும்போது, தமிழகத்திலும் 30 சீட்டுகள் வரை போட்டியிட என்.ஆர் காங்., திட்டமிட்டுள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

