ADDED : நவ 05, 2025 11:47 PM
பாகூர்: பாகூர் பகுதியில் யூரியா உர தட்டுப்பாடு உள்ளதாக எழுந்த புகாரையடுத்து, பாகூர், இருளன்சந்தை, குருவிநத்தம், நிர்ணயப்பட்டு, கன்னியக்கோவில், கரையாம்புத்தூர் மற்றும் மணமேடு ஆகிய பகுதிகளில் உள்ள உரக்கடைகளின் பொருப்பாளர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
பாகூர் கோட்ட இணை வேளாண் இயக்குனர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, துணை வேளாண் இயக்குநர் குமாரவேல் முன்னிலை வகித்தார். உர ஆய்வாளர் மற்றும் வேளாண் அலுவலர்கள் பரமநாதன், வளர்மதி வாசுதேவன், புவனேஸ்வரி ஆகியோர், பாகூர் பகுதியில் உள்ள உரக்கடைகளில் தற்போது உள்ள யூரியா மற்றும் இதர உரங்களின் கையிருப்பு பற்றிய தரவுகளை ஆய்வு செய்தனர்.
அதில், பாகூர் பகுதியில் தற்போதைய நிலவரப்படி 50 மெட்ரிக் டன் யூரியா கையிருப்பு உள்ளது. ஒரு தனியார் உரத் தொழிற்சாலையில் தற்காலிக பராமரிப்பு பணி மேற்கொண்டு வருவதால் அந்த தொழிற்சாலையின் யூரியா மட்டும் தற்போது விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. மற்ற உரத் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் யூரியா விற்பனைக்கு இருப்பதும், உர விற்பனையாளர்கள் அந்த குறிப்பிட்ட பிராண்ட் யூரியாவை மட்டும் கடையில் வைத்திருக்காமல் கூடுதலாக அனைத்து பிராண்ட் யூரியாவையும் வைத்திருக்கவும், விவசாயிகளுக்கு அவர்களுடைய நிலப்பரப்பை கணக்கில் கொண்டு தேவையான அளவு யூரியா விற்பனையை செய்திட அறிவுறுத்தப்பட்டது.

