அட கையும் ஒன்னுதான்... விசிலும் ஒன்னுதான்... அசால்ட்டா சமாளித்த தமிழக அமைச்சர்
அட கையும் ஒன்னுதான்... விசிலும் ஒன்னுதான்... அசால்ட்டா சமாளித்த தமிழக அமைச்சர்
UPDATED : அக் 03, 2026 07:39 PM
ADDED : அக் 03, 2026 06:08 PM
பிரசாரத்திற்கு ஒரு நாளே உள்ளதால் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் களம் வழக்கத்தை விட சூடுபிடித்திருக்கிறது.
காங்., வேட்பாளர் விநாயகத்தை எப்படியாவது கரைசேர்க்க வேண்டும் எனத் தமிழகத்தில் இருந்து இறங்கியிருந்தார்கள் ஹை-வோல்டேஜ் பிரசாரகர்களான த.வெ.க., அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா.
பிரசார வேன் மீது ஏறி நின்ற தமிழக அமைச்சர் ஆனந்த், புதுச்சேரி மக்களின் குறைகளை அடுக்கி, ராகுல் சாதனைகளைப் பட்டியல் போட்டுக்கொண்டே வந்தார்.
பேச்சு உச்சக்கட்டத்தை எட்டிய அந்தத் தருணத்தில்... ‘ஆகவே தாய்மார்களே... வாக்காளர்களே... நமது காங்., வேட்பாளருக்கு உங்க பொன்னான ஓட்டுகளை அள்ளிக் கொடுங்க... மறக்காம அந்த விசில் சின்னத்துல குத்தி பெருவாரியான வாக்கு வித்தியாசத்துல ஜெயிக்க வைங்க’
அமைச்சர் ஆனந்த் முழங்கி முடிக்க, மேடையில் நின்ற உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களின் இதயத் துடிப்பு ஒரு நொடி நின்றுவிட்டது. அமைச்சரே.. நாம நிக்கிறது கை சின்னம்... விசில் உங்க த.வெ.க., வோட சின்னம்யா கதர் சட்டைகளின் மைண்ட் வாய்ஸ் எதிரொலித்தது.
பதறிப்போன காங்கிரஸ் நிர்வாகிகள், அண்ணே அண்ணே... என நைஸாக அமைச்சரின் பின்னாடி சென்றனர், அண்ணே, நம்ம சின்னம் கை... விசில் இல்லை என, மிக ரகசியமாக காதில் போட்டனர்.
அடுத்த செகண்ட்... அரசியல் அனுபவம் சட்டென வேலை செய்தது. அமைச்சர் ஆனந்த் சற்றும் பிசகாமல், முகத்தில் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு மைக்கை மீண்டும் கையில் எடுத்தார்:
‘அட... கையும் ஒன்னுதான், விசிலும் ஒன்னுதான் மக்களே. தமிழகத்துல மதுராந்தகம், தாராபுரத்துல விசில் சின்னத்துக்குப் போடுங்க... ஆனா, நம்ம புதுச்சேரியில கை சின்னத்துக்கே போட்ருங்க. அதை தான் சொல்ல வந்தேன்’’ திடீரென அமைச்சரால் வீசப்பட்ட இந்த 360 டிகிரி யூ–-டர்னைப் பார்த்த கூட்டம், ‘என்னப்பா... அசால்ட்டா சமாளிக்கிறாரு’ என, அதிரடி கமெண்ட் அடிக்க, மேடையில் நிலவிய பரபரப்பு நொடியில் சிரிப்பலையாக மாறியது.
