/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிற்சங்கங்களின் பதிவிற்கு இணைய வசதி...அறிமுகம்: ஒரே குடையின் கீழ் கொண்டு வர அரசு முடிவு
/
தொழிற்சங்கங்களின் பதிவிற்கு இணைய வசதி...அறிமுகம்: ஒரே குடையின் கீழ் கொண்டு வர அரசு முடிவு
தொழிற்சங்கங்களின் பதிவிற்கு இணைய வசதி...அறிமுகம்: ஒரே குடையின் கீழ் கொண்டு வர அரசு முடிவு
தொழிற்சங்கங்களின் பதிவிற்கு இணைய வசதி...அறிமுகம்: ஒரே குடையின் கீழ் கொண்டு வர அரசு முடிவு
ADDED : டிச 25, 2025 05:07 AM

புதுச்சேரி: தொழிற்சங்கங்களை எளிதாக பதிவு செய்யவும், ஆண்டு கணக்கினை தாக்கல் செய்யவும் இரண்டு புதிய இணைய வசதிகளை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தொழிலாளர்களின் உரிமையை பெற்று தர தொழிற்சங்கங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. தொழிற்சங்க ஆரம்பிக்க தொழிற்சங்கச் சட்டம், 1926-ன் படி, சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களில் குறைந்தபட்சம் 10 சதவீதம் அல்லது 100 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று விதிகள் சொல்லுகின்றன. எனவே, ஒரு தொழிற்சங்கத்தைப் பதிவு செய்ய குறைந்தபட்சம் 7 உறுப்பினர்கள் இருந்தால் கூட போதும்.
புதுச்சேரி மாநிலத்தில் ஏராளமான தொழிற்சங்கள் இருந்தாலும் அவற்றை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒருங்கிணைக்க அரசு தொழிலாளர் துறை வாயிலாக திட்டமிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தொழிலாளர் சட்டங்களின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை, எளிமை விரைவான சேவை வழங்கலை உறுதி செய்யும் நோக்குடன், தொழிலாளர் துறையானது, தொழிற்சங்கங்களின் பதிவு சேவை, பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்களால் ஆண்டு அறிக்கைகள் தாக்கல் செய்யும் சேவை ஆகிய இரண்டு புதிய இணையவழி சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
தொழிற்சங்கங்களுக்கான இந்த புதிய இணைய சேவை வசதியை முதல்வர் ரங்கசாமி நேற்று அறிமுகப்படுத்தி வைத்து, செயல்படும் முறைகள் குறித்து கேட்டறிந்தார். இதுவரை தொழிற்சங்கப் பதிவு மற்றும் ஆண்டு அறிக்கைகள் கைமுறையில் சமர்ப்பிக்கப்பட்டு வந்ததால், காலதாமதம், ஆவணச் சுமை மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் ஏற்பட்டன. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையவழி சேவைகள் மூலம், காகிதமில்லா நடைமுறை, விரைவான பரிசீலனை, துல்லியமான பதிவேடுகள் பராமரிப்பு உறுதி செய்யப்பட உள்ளது.
தேசிய அளவில் அரசுத் துறைகளின் இணையவழி சேவைகள் வழங்கப் பயன்படும் சர்வீஸ் பிளஸ் இணையவழி தளம் வழியாக செயல்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், தொழிற்சங்கங்கள் தங்களது பதிவு விண்ணப்பங்களை இணைய வழியாக சமர்ப்பிக்கவும், தேவையான ஆவணங்களை பதிவேற்றவும், விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளவும், ஆண்டு அறிக்கைகளை எளிதாக தாக்கல் செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இச்சேவைகள் மூலம் தொழிலாளர் துறைக்கு நேரில் வருவதற்கான அவசியம் குறைக்கப்பட்டு, தொழிற்சங்கங்களின் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், நிர்வாகத் திறன் மேம்பட்டு, தொழிற்சங்கங்களுக்கு வழங்கப்படும் சேவைகள் மேலும் வலுப்பெற்றுள்ளன.
தொழிற்சங்கத்திற்கான புதிய இணைய வசதி அறிமுகத்தின்போது சபாநாயார் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தலைமைச் செயலர் சரத் சவுகான், தேசிய தகவலியல் மைய துணை தலைமை இயக்குநர் சுபேந்து குமார், தொழிலாளர் துறை செயலர் ஸ்மிதா, தொழிலாளர் துறை துணை ஆணையர் சந்திரகுமரன் உடனிருந்தனர்.

