தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வி.கே.டி., சாலை விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு இடையே 45 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு: ஆமை வேகத்தில் நடக்குது வேலைகள்

வி.கே.டி., சாலை விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு இடையே 45 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு: ஆமை வேகத்தில் நடக்குது வேலைகள்

வி.கே.டி., சாலை விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு இடையே 45 சதவீத பணிகள் மட்டுமே நிறைவு: ஆமை வேகத்தில் நடக்குது வேலைகள்


UPDATED : அக் 27, 2026 12:06 AM

ADDED : அக் 27, 2026 12:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 12:06 AM ADDED : அக் 27, 2026 12:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முதல் படம் 5773, அடுத்த படம் 5715 நான்கு, நான்கு காலம்

–நமது நிருபர்–: விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு இடையிலான வி.கே.டி., சாலை விரிவாக்கப் பணிகள் மந்தகதியில் நடப்பதால் 45 சதவீத வேலைகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. டெண்டரில் குறிப்பிட்டுள்ள கால அவகாசத்திற்குள் பணிகளை முடிக்க ‘நகாய்’ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விக்கிரவாண்டியில் இருந்து கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் செல்லும் 164 கி.மீ., நீள சாலை வி.கே.டி., சாலை (என்.ஹெச். 45) என அழைக்கப்படுகிறது. இந்த சாலையை நான்குவழிச் சாலையாக (என்.ஹெச். 45சி) விரிவாக்கம் செய்வதற்கு, கடந்த 2018ம் ஆண்டு 2,586.10 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது.

துணை நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து



விக்கிரவாண்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு பின்னலுார் வரை 66 கி.மீ., துாரம், சேத்தியாத்தோப்பில் இருந்து சோழபுரம் வரை 50.48 கி.மீ., துாரம், சோழபுரத்தில் இருந்து தஞ்சாவூர் வரை 47.83 கி.மீ., துாரம் என மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில், சேத்தியாத்தோப்பு – சோழபுரம் மற்றும் சோழபுரம் – தஞ்சாவூர் இடையிலான 100 கி.மீ., துாரத்திற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்தது. ஆனால், விக்கிரவாண்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு பின்னலுார் வரையிலான சாலைப் பணியை டெண்டர் எடுத்த ரிலையன்ஸ் நிறுவனம் துணை ஒப்பந்தம் விட்டதால் பணிகள் சரியாக நடக்கவில்லை. திட்டமிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்காததால், அந்த நிறுவனத்திற்கு வழங்கிய ஒப்பந்தத்தை ‘நகாய்’ ரத்து செய்தது.

ரூ.652.30 கோடிக்கு டெண்டர்



தொடர்ந்து, விக்கிரவாண்டி முதல் சேத்தியாத்தோப்பு வரையிலான சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள 652.30 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. கேரளாவை சேர்ந்த இ.கே.கே., என்ற நிறுவனம் டெண்டரை எடுத்து, கடந்த 2025ம் ஆண்டு ஜூனில் பணிகளை துவக்கியது. அடுத்த ஆண்டு (2027ம் ஆண்டு) ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என காலக்கெடுவுடன் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு இடையிலான 66 கி.மீ., துாரத்தில் கோலியனுார் கூட்ரோடு, அதன் அருகில் உள்ள ரயில்வே கேட் பகுதிகளில் மேம்பாலம், பண்ருட்டி அடுத்த பக்கிரிப்பாளையம், வடலுார் பகுதிகளில் ரயில்வே மேம்பாலம், தென்பெண்ணை மற்றும் கெடிலம் ஆற்று பகுதியில் மேம்பாலம், கிராமங்களை இணைக்கும் பகுதியில் 12 சிறிய மேம்பாலங்கள், 10 பெரிய மேம்பாலங்கள், 96 கல்வெர்ட் அமைக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி பண்ருட்டி மற்றும் வடலுார் பகுதிகளில் வெளிவட்ட பைபாஸ் அமைக்கப்படுகிறது.

இணைப்பு சாலை பணிகள்



தற்போது, கோலியனுார் கூட்ரோடு, அதன் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கோலியனுார் கூட்ரோடு பகுதியில் மேம்பால கான்கிரீட் பணிகள் முடிந்து இணைப்பு சாலைப் பணிகள் நடந்து வருகிறது. கோலியனுார் ரயில்வே கேட் பகுதியில் பில்லர் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

இதேபோன்று, கடலுாரில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் ராசாப்பாளையம் கூட்ரோடு, கண்டரக்கோட்டை பகுதியில் மேம்பாலம் கான்கிரீட் பணிகள் முடிந்து இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

பண்ருட்டி வெளிவட்ட பைபாஸ் துவங்கும் சித்திரைச்சாவடி பகுதியில் மேம்பாலத்திற்கான கான்கிரீட் பணி முடிந்து இணைப்பு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. பண்ருட்டி அடுத்த பூங்குணம் ஏரியில் 200 மீட்டர் துாரத்திற்கு மெகா மேம்பாலம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. கொள்ளுக்காரன்குட்டையில் மேம்பாலம் கான்கிரீட் போடப்பட்டு இணைப்பு சாலை பணி நடக்கிறது.

நெய்வேலி என்.எல்.சி., எதிரிலும், வடலுாரில் இருந்து கடலுார் செல்லும் சாலையிலும் மேம்பாலம் கான்கிரீட் போடப்பட்டு இணைப்பு சாலை பணி நடக்கிறது.

5 இடங்களில் பில்லர்கள் மட்டுமே



பண்ருட்டி அடுத்த பக்கிரிப்பாளையம் ரயில்வே கிராசிங் பகுதியில் மேம்பாலத்திற்கான பில்லர்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. இங்கு இணைப்பு சாலை பணிகள் கிடப்பில் உள்ளது. பண்ருட்டி வெளிவட்ட பைபாஸ் முடியும் இடமான அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரி எதிரில் மேம்பாலத்திற்கான மெகா சைஸ் பில்லர்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

வடக்குத்து பகுதியில் மேம்பாலத்திற்கான பில்லர்கள் போடப்பட்டு, இணைப்பு சாலைக்கு பள்ளம் தோண்டப்படுகிறது. காடாம்புலியூர் மற்றும் வடக்குத்து அடுத்த கண்ணுதோப்பு என்.எல்.சி., வாய்க்கால் பகுதி மற்றும் வடலுார் வெளிவட்ட பைபாஸ் பணி துவங்கும் பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கான ராட்சத பில்லர்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இச்சாலையில் மேம்பாலங்களின் பணி முடிந்த பகுதிகளிலும், தார் சாலை அமைக்கும் பணிகள் முடிந்த பகுதிகளிலும் வாகன போக்குவரத்து துவங்கியுள்ளது.

பணிகள் முடிவது கேள்விக்குறி



விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு இடையிலான சாலைப் பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தாலும், இதுவரை 45 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. டெண்டர் எடுத்து பணிகளை துவக்கி 16 மாதங்கள் நிறைவடைந்து விட்டது; இன்னும் 8 மாதங்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. ஆனால், 45 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. மீதமுள்ள 8 மாதங்களில் 55 சதவீத பணிகளை முடித்து நிறைவு செய்ய வேண்டும்.

கடந்த காலத்தில் டெண்டர் எடுத்த நிறுவனங்களை போலவே, தற்போதைய நிறுவனமும் தாமதம் செய்து வருகிறது. மழைக்காலம் துவங்கிவிட்ட நிலையில், டெண்டரில் குறிப்பிட்டுள்ளப்படி வரும் ஜூன் மாதத்துக்குள் பணிகள் முடிவது கேள்விக்குறியாக உள்ளது.

எனவே, பணிகளை குறித்த காலத்தில் முடித்து, வாகன ஓட்டிகளின் பயன்பாட்டுக்கு சாலையை திறக்க ‘நகாய்’ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் அனைத்து வேலைகளையும் முடுக்கி விட வேண்டும்.

வாகன ஓட்டிகள் அவதி


வி.கே.டி., நான்கு வழிச்சாலை வழியாக 4 தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் குறுக்கே செல்கிறது. விழுப்புரம் – புதுச்சேரி நெடுஞ்சாலை, விழுப்புரம் – நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை, கடலுார் – விழுப்புரம் நெடுஞ்சாலை, கடலுார் – சேலம் நெடுஞ்சாலைகள் வி.கே.டி., சாலையின் குறுக்கே கடந்து செல்கின்றன. இந்த தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் வி.கே.டி., சாலை விரிவாக்கப் பணி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தினந்தோறும் அவதியடைந்து வருகின்றனர்.



‘கிடுக்கிப்பிடி’ அவசியம்


வி.கே.டி., சாலை பணிகளை ‘நகாய்’ அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, மேம்பாலங்களுக்கான பில்லர்கள் அமைத்துள்ள இடங்களில் இணைப்பு சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். மழையை காரணம் காட்டி பணியில் தொய்வு ஏற்படாமல் தீவிரமாக வேலைகளை மேற்கொள்ள ஒப்பந்த நிறுவனத்தை அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும். ‘நகாய்’ அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தினால் மட்டுமே இச்சாலை விரிவாக்கப் பணி விரைந்து முடியும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us