தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கவர்னர் கைலாஷ்நாதனுக்கு... உழவர் சந்தை விவசாயிகளின் திறந்த மடல்...

 கவர்னர் கைலாஷ்நாதனுக்கு... உழவர் சந்தை விவசாயிகளின் திறந்த மடல்...

 கவர்னர் கைலாஷ்நாதனுக்கு... உழவர் சந்தை விவசாயிகளின் திறந்த மடல்...


ADDED : ஏப் 18, 2026 08:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2026 08:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கவர்னர் கைலாஷ்நாதனுக்கு... ஏழை விவசாயியின் திறந்த மடல்...

புதுச்சேரி தாவரவியல் பூங்காவினை சுற்றிலும் இருக்கும் உழவர் சந்தை என்பது எங்களுக்கு வெறும் வியாபாரத் தளம் அல்ல; அது எங்கள் வாழ்வாதாரத்தின் கருவறை. விடியற்காலையில் பனி விலகும் முன்பே, வயல்வெளியில் முதுகுத்தண்டு வில்லாக வளைந்து நாங்கள் பறிக்கும் ஒவ்வொரு தக்காளியும், கத்திரிக்காயும் இங்கு தான் கொண்டு வந்து விற்கிறோம். ஆனால், இன்று அந்த உழைப்பை இப்போது திருடர்கள் திருடிபோய் கொண்டிருக்கிறார்கள்.

விற்பனையாகாத காய்கறிகளை மீண்டும் மூட்டை கட்டி ஊருக்குக் கொண்டு போகத் திராணி இல்லாமல் கூலிக்கும் டிக்கெட்டுக்கும் பயந்து, நாளை பார்த்துக்கொள்ளலாம்' என்று நம்பிக்கையோடு அங்கே வைத்துவிட்டுச் செல்கிறோம்.

ஆனால், மறுநாள் வந்து பார்த்தால்... யாரோ குடித்துவிட்டுப் போட்ட இளநீர் கூடுகள் எங்களைப் பார்த்துப் பற்களைக் காட்டுகின்றன... அழுகிய தக்காளியைக் கூட விடாமல் அள்ளிச் சென்று விடுகிறது அந்த திருட்டு கும்பல்.

நாங்க மண்ணைப் பிசைஞ்சு சோறு போடுறவங்க ஐயா... ஆனா இன்னைக்கு எங்களையே பிசைஞ்சு எடுத்துக்கிட்டு இருக்காங்க இந்த திருட்டுப் பயலுங்க.., அந்தத் திருட்டுப் புத்திக்கு முன்னே, விவசாயியின் உழைப்பு இவ்வளவு கேவலமா போய்விட்டது.

சந்தையைச் சுற்றிப் பாதுகாப்பில்லை, பூட்ட கதவுகள் இல்லை. கூப்பிடும் துாரத்தில் ஒதியஞ்சாலை போலீஸ் ஸ்டேஷன் இருக்கு. காலாற நடந்து வரும் துாரம் தான். வாங்கிங்காக கூட வரலாம். ஆனால், எங்கள் காய்கறிகள் களவு போகும்போது அந்தக் காவலர்களின் கண்கள் மட்டும் எங்கே போயின... போலீஸில் ஏன் புகார் தரவில்லை என்று நீங்கள் கேட்கலாம்.

சில நுாறு ரூபாய் காய்கறித் திருட்டுக்காக, வாழ்நாள் முழுக்க நீதிமன்றப் படியேறி அலைந்து எங்கள் வாழ்க்கையை அடகு வைக்க நாங்கள் தயாராக இல்லை. அதுதான் நிதர்சனம்.. இப்போது தேர்தல் காலம். நன்னடத்தை விதிகளைக் காட்டி வேளாண் துறை அதிகாரிகள் கைவிரிப்பார்கள். ஆனால், வயிறுக்குத் தேர்தல் விதிகள் தெரியாது ஐயா.. கவர்னர் மாளிகையிலிருந்து ஒரு சிறிய உத்தரவு வந்தால் போதும், உழவர் சந்தைச் சுவர் உயரும், கதவுகள் பூட்டப்படும்.

கவர்னர் அவர்களே... நாங்கள் கேட்பது மானியம் அல்ல. உழைப்பால் விளைந்த பொருளுக்கு பாதுகாப்பு. நாங்கள் கேட்பது சலுகையும் அல்ல, எங்கள் உழைப்பின் மீதான உரிமை. அலுவலக பணியில் பிஸியாக இருக்கும் நீங்கள், இந்த ஏழை விவசாயிகளின் கண்ணீரையும் கொஞ்சம் கவனிப்பீர்களா..

இல்லையெனில், அடுத்த முறை நாங்கள் கொண்டு வருவது காய்கறிகளாக இருக்காது... காய்ந்து போன எங்கள் வாழ்க்கையாகத்தான் இருக்கும்...

கண்ணீருடன் ஏழை விவசாயி....

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us