/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு
/
புதுச்சேரி சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு
புதுச்சேரி சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு
புதுச்சேரி சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு
ADDED : பிப் 22, 2024 11:29 PM

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில், ரூ.4,634 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில், புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். லோக்சபா தேர்தல் விரைவில் நடக்க உள்ளதால், இந்தாண்டு முழுமையான பட்ஜெட்டுக்கு பதிலாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு புதுச்சேரி அரசு முடிவு செய்தது.
இதற்காக, புதுச்சேரி சட்டசபை நேற்று காலை 9:45 மணிக்கு கூடியது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக, நிதித் துறை பொறுப்பு வகிக்கும் ரங்கசாமி எழுந்தார். அப்போது, எதிர்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து இடைக்கால பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
எதிர்கட்சி தலைவர் சிவா பேசும்போது, 'தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். நமக்கு கால அவகாசம் இருந்தும், வாய்ப்புகள் இருந்தபோதும் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யாதது ஏன்?
கவர்னருடனான பிரச்னையால் பட்ஜெட் தொடர்பான கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பவில்லையா? கோஷ்டி பூசலால் வாய்ப்பை தவறவிட்டு விட்டீர்கள். அரசின் அலட்சியப் போக்கை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்' என்றார்.
இதையடுத்து, தி.மு.க., - காங்., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் சபையில் இருந்து வெளியேறினர்.
தொடர்ந்து, வரும் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 5 மாதங்களுக்கு அரசின் செலவினங்களுக்காக ரூ.4,634 கோடியே 29 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். குரல் ஓட்டெடுப்பின் மூலமாக இடைக்கால பட்ஜெட் நிறைவேற்றப்பட்டதாக, சபாநாயகர் செல்வம் அறிவித்தார்.
லோக்சபா தேர்தல் முடிந்த பின், நடப்பு 2024 -25ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது.