/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூளை மரணம் அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்
/
மூளை மரணம் அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்
ADDED : ஏப் 26, 2026 09:03 PM

புதுச்சேரி: மூளை சாவு அடைந்து, உடல் உறுப்புகளை தானம் வழங்கியவரின் உடலுக்கு அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் அஞ்சலி செலுத்தினார்.
சேலியமேடு டி.என்., பாளையம் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் வரதன், 45; மெக்கானிக். இவர், கடந்த 24ம் தேதி, சேலியமேடு பகுதியில் விபத்திற்குள்ளாகி, தலையில் காயமடைந்து, இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மூளை மரணம் அடைந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, மனைவி வசந்தி, மகள்கள் லீஷாதேவி, முகிஷா மற்றும் குடும்பத்தினர் வரதன் உடல் உறுப்புகளை மருத்துவமனைக்கு தானமாக வழங்க முன்வந்தனர். புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் முதுகலை நிறுவனத்தில் அறுவை சிகிச்சை மூலம் அவரது உறுப்புகளான இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் கண்விழிகள் எடுக்கப்பட்டன. சிறுநீரகங்கள் ஜிப்மர் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டன. கண்விழிகள் இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் முதுகலை நிறுவனத்திற்கு தானமாக வழங்கப்பட்டன.
இதனை கவுரவிக்கும் வகையில், அரசு சார்பில் கலெக்டர் குலோத்துங்கன் நேற்று மாலை அரசு மருத்துவமனைக்கு சென்று, வரதன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அரசு செயலர் சவுத்ரி முகமது யாசின், சுகாதாரத்துறை மற்றும் நலவாழ்வு இயக்குநர் செவ்வேள், மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ், மக்கள் தொடர்பு அதிகாரி ஹர்ஷவர்தன் சர்மா, குறைதீர்ப்பு அதிகாரி ரவி, டாக்டர்கள் மற்றும் சோட்டோ குழுவினர் அஞ்சலி செலுத்தினர்.

