/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: 7 பேருக்கு மறு வாழ்வு
/
விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: 7 பேருக்கு மறு வாழ்வு
விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: 7 பேருக்கு மறு வாழ்வு
விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: 7 பேருக்கு மறு வாழ்வு
ADDED : ஜன 03, 2025 01:50 AM

புதுச்சேரி: மூளைசாவு அடைந்த வாலிபரின் கிட்னி, கல்லீரல், கண் ஆகியவை ஏழு பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், கீழ்புத்துப்பட்டு அகதிகள் முகாமை சேர்ந்தவர் விஜயகுமார் மகன் பிரேம்குமார்,19; இவர் கடந்த 31ம் தேதி இரவு 10:00 மணிக்கு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தனது கே.டி.எம். டியூக் பைக்கில் புதுச்சேரிக்கு புறப்பட்டார்.
காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி இ.சி.ஆரில் உள்ள பள்ளத்தில் பைக் இறங்கியதில், நிலை தடுமாறி விழுந்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடன், அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, பிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக மூலக்குளம் ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் மூளைச் சாவு அடைந்தார்.
அதனால், அவரது உடல் உறுப்புகளான கிட்னி, கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் இரு கண்களை தானம் கொடுக்க அவரது பெற்றோர் முன்வந்தனர்.
அதனைத் தொடர்த்து, ஐந்து உறுப்புகளும் ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் டாக்டர் வெங்கட்ராம் குழுவினர் தலைமையில் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது. ஒரு கிட்னி அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 47 வயது நபருக்கு பொருத்த கொண்டு செல்லப்பட்டது.
மற்றொரு கிட்னி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 24 வயது பெண்ணிற்கு பொருத்துவதற்காக சிறுநீரகவியல் தலைவர் குமார், துறை தலைவர் சுதாகர், டாக்டர் ரத்னவேல் காமராஜ், டாக்டர் ஜோதி பிரசாத், முரளிகிருஷ்ணா, உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கழக அலுவலர்கள் தனலட்சுமி, ஞானசேகரன் ஆகியோர் தலைமையில் கொண்டு செல்லப்பட்டது.
கல்லீரல் கிருமாம்பாக்கம் மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 59 வயது ஆண் நபருக்கு பொருத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டது. இரு கண்கள் தவளக்குப்பம் அரவிந்தர் கண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. இறந்த வாலிபர் பிரேம்குமாரால், ஏழு பேருக்கு உடல் உறுப்பு தானம் கிடைக்கப் பெற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.