/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.7.14 கோடியில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி; முதல்வர் ரங்கசாமி திறந்து வைப்பு
/
ரூ.7.14 கோடியில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி; முதல்வர் ரங்கசாமி திறந்து வைப்பு
ரூ.7.14 கோடியில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி; முதல்வர் ரங்கசாமி திறந்து வைப்பு
ரூ.7.14 கோடியில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி; முதல்வர் ரங்கசாமி திறந்து வைப்பு
ADDED : மார் 02, 2024 06:23 AM

புதுச்சேரி : முத்தியால்பேட்டை பகுதியில், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை, முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
முத்தியால்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட, விஸ்வநாதன் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில், மக்கள் தொகை பெருக்கம், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றால், குடிநீர் தேவை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் ரூ.7.14 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் 7 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியும், 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, கீழ்நிலை நீர்த் தேக்க தொட்டியும், அமைக்கப்பட்டுள்ளன.
நீர் உந்து முதன்மை குழாய்கள், நீர் பங்கீட்டு குழாய்கள், புதிய குடிநீர் இணைப்புகள் வழங்குதல், மோட்டார் பம்பு செட்டுகள், ஜெனரேட்டர் மற்றும் குழாய்கள் பதிக்கப்பட்டு சாலைகளை செப்பனிடுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பணிகள் முடிந்த நிலையில் விஸ்வநாதன் நகர், குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியை முதல்வர் ரங்கசாமி, நேற்று திறந்து வைத்தார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், தலைமை தாங்கினார். முத்தியால்பேட்டை எம்.எல்.ஏ., பிரகாஷ்குமார் முன்னிலை வகித்தார்.
பொதுப்பணித்துறை செயலர் கேசவன், தலைமை பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர் உமாபதி, உதவி பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, ஒப்பந்ததாரர் சிவக்குமார் வரவேற்றார்.
இத்திட்டத்தின் மூலம் விஸ்வநாதன் நகர், தெபாசன்பேட்டை, செயின்ட் சைமன்பேட்டை, மாணிக்க முதலியார் தோட்டம், லுார்து நகர், லெனின் நகர் மற்றும் அதனை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த, சுமார், 15 ஆயிரத்து 368 பேர் பயன்பெறுவர்.

