/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கன்னியக்கோவில் கமிட்டியில் நெல் கொள்முதல் துவக்கம்
/
கன்னியக்கோவில் கமிட்டியில் நெல் கொள்முதல் துவக்கம்
கன்னியக்கோவில் கமிட்டியில் நெல் கொள்முதல் துவக்கம்
கன்னியக்கோவில் கமிட்டியில் நெல் கொள்முதல் துவக்கம்
ADDED : பிப் 07, 2025 04:10 AM

பாகூர்: கன்னியக்கோவில் மார்க்கெட் கமிட்டி பத்தாண்டுகளாக மூடப்பட்டிருந்த நிலையில், தினமலர் செய்தி எதிரொலியால், மீண்டும் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யும் பணி துவங்கியுள்ளது.
புதுச்சேரியின் நெல் களஞ்சியமான பாகூர் பகுதியில், 5000 ஹெக்டருக்கும் அதிகமான பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.இப்பகுதி விவசாயிகளின் நலன் கருதி, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, கன்னியக்கோவிலில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் திறக்கப்பட்டது. பாகூர் மற்றும் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் பயனடைந்துவந்தனர்.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக இந்த விற்பனை கூடம் செயல்படாமல் முடங்கியது.
இங்கு, தானியங்களை உலர்த்தும் களம், நவீன எடை மேடை, குடோன் வசதி, ஓய்வரை வசதிகளை ஏற்படுத்தி, மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து, தினமலர் நாளிதழில் கடந்த 26ம் தேதி செய்தி வெளியிட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, கன்னியக்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர, வேளாண் துறை மற்றும் விற்பனை கூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதையடுத்து, கன்னியக்கோவில் விற்பனை கூடத்திற்கு, நேற்று விவசாயிகள் நெல்லை விற்பனைக்கு கொண்டு சென்றனர். அதிகாரிகள் முன்னிலையில், எலக்ட்ரானிக்ஸ் எடை அளவை மூலமாக வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்தனர். முதல் நாளான நேற்று 50 மூட்டை பி.பி.டி., ரகம் வந்தது. மூட்டை ஒன்று (75 கிலோ ) 1,613 ரூபாக்கு கொள்முதல் செய்யப்பட்டது.
பாகூர் விவசாயி ஆதிமூலம் கூறுகையில், ''தமிழகத்தில், இந்திய உணவு கழகம் மூலமாக, ஒரு கிலோ நெல் 24 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
அதுபோல், புதுச்சேரி விவசாயிகளிடமும், இந்திய உணவுக் கழகம் நேரடியாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். பட்ஜெட்டில் அறிவித்தபடி நெல்லுக்கான கொள்முதல் மானியம் கிலோவிற்கு 2 ரூபாயை, கொள்முதல் செய்யும்போதே விவசாயிகளுக்கு வழங்கினால்,அனைத்து விவசாயிகளும், விற்பனை கூடத்திற்கு நெல்லை கொண்டு வருவார்கள் என்றார்.''

