ADDED : ஏப் 22, 2026 05:38 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் பணியாற்றும் தமிழக வாக்காளர்களுக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி சம்பளத்துடன் விடுமுறை வழங்க தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் அறிவுறுத்தி உள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இன்று 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தேர்தலில் ஓட்டு அளிக்கும் உரிமை கொண்டுள்ள ஒவ்வொரு ஊழியருக்கும் ஓட்டு போடுவதற்கு ஏதுவாக தேர்தல் தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
இது அரசுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற அமைப்புகள் என அனைத்து வகை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த விடுமுறைக்காக ஊதியத்தில் எவ்வித குறைப்பும் செய்யக்கூடாது. இவ்விதிமுறைகளை மீறும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, புதுச்சேரியில் செயல்படும் அனைத்து நிறுவனங்களும், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநில வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள ஊழியர்கள், தங்களது தொகுதிகளுக்கு சென்று ஓட்டு அளிக்க ஏதுவாக தேர்தல் நடக்கும் நாட்கள் அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும்.
தனியார் துறை, தொழிற்துறை, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கட்டுமானத்துறை மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்த சட்ட விதிமுறைகளை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு மாநிலத்தை சேர்ந்த ஊழியர்கள் ஓட்டு அளிக்க செல்ல முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
ஆகையால், புதுச்சேரியில் பணிபுரியும் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநில வாக்காளர்கள் அனைவரும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் ஓட்டுரிமையை தவறாமல் பதிவு செய்து தேர்தலில் முழுமையாக பங்கேற்குமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
மேலும், புதுச்சேரியில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்களில் தற்போது கல்வி பயிலும், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் மாணவர்கள் தேர்தலில் தங்கள் ஓட்டுரிமையை பயன்படுத்த தகுதியானவர்கள்.
அதன்படி, பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், அத்தகைய மாணவர்கள் தங்களது தொகுதிகளுக்கு சென்று ஓட்டுளிக்க தேவையான விடுப்பு அல்லது அனுமதியை வழங்க வேண்டும்.
கல்வி சார் பொறுப்புகள் காரணமாக எந்த தகுதியான வாக்காளரும், ஓட்டுளிக்கும் வாய்ப்பை இழக்காமல் இருக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
