/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேர்தல் பணிகளில் எதிர்க்கட்சியினர் வேகம் : அமைதி காக்கும் ஆளும்கட்சியினர்
/
தேர்தல் பணிகளில் எதிர்க்கட்சியினர் வேகம் : அமைதி காக்கும் ஆளும்கட்சியினர்
தேர்தல் பணிகளில் எதிர்க்கட்சியினர் வேகம் : அமைதி காக்கும் ஆளும்கட்சியினர்
தேர்தல் பணிகளில் எதிர்க்கட்சியினர் வேகம் : அமைதி காக்கும் ஆளும்கட்சியினர்
ADDED : செப் 20, 2011 10:43 PM
தேர்தல் பணிகளில் அ.தி.
மு.க., காங்., ஆகிய கட்சிகள் வேகம் காட்டி வருகின்றன. ஆனால், ஆளும்கட்சியான என்.ஆர். காங்., தரப்பில் அமைதி நிலவுகிறது. இந்திரா நகர் தொகுதி தேர்தல் பணிகளில் தற்போதைய நிலவரப்படி அ.தி.மு.க., முந்தி சென்று கொண்டுள்ளது. அக்கட்சியின் பொருளாளர் சுத்துக்கேணி பாஸ்கர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். சுத்துக்கேணி பாஸ்கர் கடந்த மூன்று நாட்களாக, தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று முக்கியஸ்தர்களைச் சந்தித்து தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார்.
அ.தி.மு.க., தேர்தல் பணிகளைக் கவனிக்க, தமிழக அமைச்சர்கள் சண்முகம், சம்பத், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செம்மலை எம்.பி., ஆகியோரை கொண்ட நால்வர் குழுவை தமிழக முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார். இக்குழுவினர் புதுச்சேரியில் முகாமிட்டு தேர்தல் பணிகளை நேரில் பார்வையிட்டு முடுக்கிவிட உள்ளனர். இந்திரா நகர் தொகுதியில் தேர்தல் பணியாற்ற, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 5 பேர் தலைமையில் தலா 11 பேர்களைக் கொண்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் உள்ள 27 பூத்கள், இந்த 5 குழுக்களிடம் பிரித்து தரப்பட்டு தேர்தல் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், 27 பூத்களிலும் பூத் வாரியான தேர்தல் பணிக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களில் மாநில, மாவட்ட, தொகுதி, கிளை அளவிலான அ.தி.மு.க., நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து நிர்வாகிகளும் பம்பரமாக சுழன்று பணியாற்றி ஓட்டுக்களை பெற்று தர வேண்டும் என அக்கட்சியின் தலைமை உத்தரவிடப்பட்டுள்ளது. காங்., கட்சியை பொறுத்தவரை, கதிர்காமம் வட்டார காங்., தலைவர் ஆறுமுகத்துக்கு சீட் தர அக்கட்சி நிர்வாகிகள் மேலிடத்துக்கு பரிந்துரை செய்துள்ளனர். இதற்கு கட்சி மேலிடம் 'கிரீன் சிக்னல்' காண்பித்து விட்டாலும், முறைப்படியான அறிவிப்பு இதுவரை வரவில்லை. இருந்தபோதும், தேர்தல் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளில் மாநில காங்., தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தீவிரமாக இறங்கி உள்ளார்.
இந்திரா நகர் தொகுதியில் அமைந்துள்ள 7 வார்டுகளில் காங்., கட்சிக்குத் தேர்தல் பணிகளைக் கவனிக்க எம்.எல்.ஏ.,க்கள் தேனீ ஜெயக்குமார், நமச்சிவாயம், வல்சராஜ், லட்சுமிநாராயணன், மல்லாடி கிருஷ்ணாராவ், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி ஆகியோர் தலைமையில் ஏழு குழுக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் எம்.எல்.ஏ.,வுடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் இருவரும் இடம் பெற்று இருப்பர். மேலும், 27 பூத்களுக்கு தலா இரு நிர்வாகிகளை கொண்ட குழுக்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்குழுக்களில் மாநில, மாவட்ட, வட்டார காங்., நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களும் இடம் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாமல், 16 பேரை கொண்ட பிரசாரக் குழுவும் காங்., கட்சியில் தயாராகி விட்டது.
அதேசமயம் என்.ஆர். காங்., வட்டாரத்தில் பெரும் அமைதி நிலவுகிறது. சேலத்திற்குச் சென்று அப்பா பைத்தியம் சாமிகள் மடத்தில் வேட்பாளர் பெயரை முதல்வர் ரங்கசாமி முடிவு செய்து வந்து விட்டார். ஆனால், அஷ்டமி, நவமிஎன நாட்கள் நன்றாக இல்லாததால் எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறார். தேர்தல் தொடர்பாக நாளை மறுநாள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த முதல்வர் திட்டமிட்டுள்ளார். இதற்கு பிறகே என்.ஆர். காங்., கட்சியில் தேர்தல் பணிகள் வேகம் பிடிக்கும்.
-நமது சிறப்பு நிருபர்-