/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுவர்களுக்கு பைக் வாங்கி கொடுக்கும் பெற்றோர்களே உஷார்... ஆசையாக வாங்கி கொடுத்து ஆபத்தில் சிக்க வைக்க வேண்டாம்
/
சிறுவர்களுக்கு பைக் வாங்கி கொடுக்கும் பெற்றோர்களே உஷார்... ஆசையாக வாங்கி கொடுத்து ஆபத்தில் சிக்க வைக்க வேண்டாம்
சிறுவர்களுக்கு பைக் வாங்கி கொடுக்கும் பெற்றோர்களே உஷார்... ஆசையாக வாங்கி கொடுத்து ஆபத்தில் சிக்க வைக்க வேண்டாம்
சிறுவர்களுக்கு பைக் வாங்கி கொடுக்கும் பெற்றோர்களே உஷார்... ஆசையாக வாங்கி கொடுத்து ஆபத்தில் சிக்க வைக்க வேண்டாம்
ADDED : மார் 15, 2025 10:21 PM

சிறுவர்களிடம் பைக்கை கொடுத்து அவர்களின் எதிர்காலத்தை இருட்டில் தள்ளிவிட வேண்டாம்.
புதுச்சேரியில் சமீப காலமாக 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள், லைசென்ஸ் இல்லாமல் பைக்குகளில் பறப்பது அதிகரித்துள்ளது. பிள்ளைகள் அடம் பிடிக்கின்றனர் என்பதற்காக, அவர்களின் ஆயுளைப்பற்றி கவலைப்படாமல் அவர்கள் ஆசைப்பட்ட அதிக திறன் கொண்ட பைக்குகளை வாங்கிக் கொடுத்து புலகாங்கிதம் அடைகின்றனர் பெற்றோர்.
ஆனால் லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் தான் முதலில் பாதிக்கப்படும். குடும்பத்திற்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பும் ஏற்படும் என்பதும் தெரியாமல் உள்ளனர்.
மோட்டார் வாகன விதிமுறைப்படி பைக் ஓட்ட 18 வயது நிறைவடைய வேண்டும். அதற்கு முன்பே, வாகனத்தை ஓட்ட வேண்டுமென்றால், மோட்டார் வாகன லைசென்ஸ் பெற்ற பெற்றோரின் மேற்பார்வையில், அவர்களது பெயரிலுள்ள 50 சி.சி., திறன் வரை, கியர் இல்லாத வாகனத்தை மட்டுமே ஓட்டலாம். அதற்கு 16 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
அதற்கு வயது சான்றை சமர்ப்பித்து, கல்லுாரியில் ஒப்பந்தச்சான்று பெற்று, பெற்றோரின் லைசென்ஸ், ஆர்.சி., புத்தகம், இன்சூரன்ஸ் சமர்ப்பித்து, அதற்கென்று மோட்டார் வாகன லைசென்ஸ் பெற வேண்டும். இதற்கு தனி நடைமுறை உள்ளது.
இது பெரும்பாலான பெற்றோர்களுக்கு தெரியாமல் உள்ளதால், பைக்கினை வாங்கி கொடுத்து சிக்கலில் மாட்டிக்கொள்கின்றனர்.
தண்டனை என்ன
திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டும் சிறார்களுக்கு 2019 சட்டப்பிரிவு 199(ஏ)ன் படி சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் தான் முழு பொறுப்பு. தங்களுக்கு ஏதும் தெரியாது; சிறுவன் தெரியாமல் செய்துவிட்டான் என்று கூறி தப்பிவிட முடியாது. லைசென்ஸ் இல்லாத சிறுவனுக்கு பைக் கொடுத்த பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது வாகன உரிமையாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் மற்றும் 3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்க சட்டத்தில் இடம் உள்ளது.
சிறுவன் விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் பதிவு ஓராண்டிற்கு ரத்து செய்யப்படும். அதன்பிறகு வாகனத்தை பதிவு செய்ய வேண்டும். வாகனத்தை ஓட்டிய சிறுவன், 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற இயலாது. திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் அதிக அபராதம் சிறார் வாகனம் ஓட்டுவதற்கு தான் விதிக்கப்பட்டுள்ளது.
லைசென்ஸ் இல்லாமல் சிறார்கள் பைக் ஓட்டினால், பெரிய விபத்து அல்லது சிறிய விபத்து என்றெல்லாம் பார்ப்பதில்லை. விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால், சிறாரை கைது செய்து அபராதமும் தண்டனையும் விதிக்கப்படலாம். தேவைப்பட்டால் பைக்குகளை கூட பறிமுதல் செய்யலாம்.
இது விபத்தின் தன்மை பொருத்தே உள்ளது. இதுபோன்ற விபத்து வழக்கில் எல்லா நடைமுறையும் கோர்ட்டில் தான் பெற்றோர் சந்திக்க வேண்டி இருக்கும்.
மகன் சந்தோஷத்திற்காக பெற்றோர் பைக் வாங்கி கொடுத்துவிடலாம். ஆனால் விபத்தினை சந்திக்கும்போது, பிள்ளைகளால் வேதனையாகவும் கஷ்டமாகவும் இருக்கும். வழக்கு, வாய்தா, ஒவ்வொரு மாதமும் கோர்ட் என்று அலையும்போது பெற்றோருக்கு, 'ஏன்டா இந்த பைக்கினை வாங்கி கொடுத்தோம்' என்று, நினைத்து தங்களை தாங்களே நொந்து கொள்ள வேண்டி இருக்கும்.
இன்ஸ்சூரன்ஸ் கிடைக்குமா
இன்சூரன்ஸ் நிறுவன பிரதிநிதிகள் கூறும்போது; மோட்டார் வாகன சட்டத்தின்படி பைக்கிற்கு இன்சூரன்ஸ், ஓட்டும் நபருக்கு ஓட்டுநர் உரிமம், கட்டாயம் இருக்க வேண்டும். அப்போது தான் விபத்து நடக்கும்போது இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும்.
பைக்கிற்கு இன்ஸ்சூரன்ஸ் இருந்து ஓட்டும் சிறுவனுக்கு லைசென்ஸ் இல்லையென்றால் சிக்கல். விபத்தில் பைக் சேதமடைந்து இருந்தாலும் காப்பீடு கிடைக்காது. வாகனத்தின் உரிமையாளர் ஒப்பந்தத்தை மீறி ஓட்டுநர் உரிமம் இல்லாத சிறுவனுக்கு அவர் தனது பைக்கினை கொடுத்ததால் அவர் தான் அனைத்து பழுதுகளையும் சரி செய்து கொள்ள வேண்டும்.
ஒருவேளை லைசென்ஸ் இல்லாத சிறுவன் விபத்தில் உயிரிழப்பினை ஏற்படுத்தினால், பொதுவாக இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீடு தொகை கொடுக்காது. அதுபோன்ற சூழ்நிலையில் நீதிமன்றம் தலையிடுகிறது.
இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும், வாகன உரிமையாளர்களுக்கு ஒப்பந்தம் இருந்தாலும் கூட, சம்பந்தமில்லாத அப்பாவி ஒருவர் உயிரிழந்து அவரது குடும்பம் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் நீதிமன்றம் உத்தரவிடும் இழப்பீட்டு தொகையை இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் முதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கும்.
பிறகு இத்தொகை லைசென்ஸ் இல்லாமல் சிறுவனுக்கு பைக் கொடுத்த வாகன உரிமையாளரிடம் ஒரே தவணையாக இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் வசூலிக்க வேண்டும். எனவே இழப்பீட்டு தொகையை பைக் கொடுத்த பெற்றோர் தான் அளிக்க வேண்டி இருக்கும். இது பிறகு தெரிய வரும்போது தான் பெற்றோர்கள் நிலைகுலைந்து விடுகின்றனர். எனவே பைக்கினை 18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு கொடுக்காமல் இருப்பதே நல்லது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.