/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருநள்ளாறுக்கு 40 ஆண்டிற்கு பின் பயணிகள் ரயில்; உற்சாக வரவேற்பு
/
திருநள்ளாறுக்கு 40 ஆண்டிற்கு பின் பயணிகள் ரயில்; உற்சாக வரவேற்பு
திருநள்ளாறுக்கு 40 ஆண்டிற்கு பின் பயணிகள் ரயில்; உற்சாக வரவேற்பு
திருநள்ளாறுக்கு 40 ஆண்டிற்கு பின் பயணிகள் ரயில்; உற்சாக வரவேற்பு
ADDED : ஆக 30, 2025 07:41 AM

காரைக்கால் : திருநள்ளாறு ரயில் நிலையத்திற்கு 40 ஆண்டிற்கு பிறகு வந்த பயணிகள் ரயிலை சபாநாயகர் மற்றும் அமைச்சர் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
காரைக்கால் மாவட்டம் , திருநள்ளாறு - பேரளம் இடையே 23.5 கி.மீ., தொலைவுக்கு கடந்த 1951ம் ஆண்டு மீட்டர் கேஜ் ரயில் பாதை அமைத்து, ரயில் சேவை துவங்கப்பட்டது. பின், கடந்த 1986ம் ஆண்டு இப்பாதையை அகலப்பாதையாக மாற்றும் பணிக்காக ரயில் சேவை நிறுத்தப் பட்டது.
இப்பணி நீண்ட இழுபறிக்கு பின் முடிந்து கடந்த மே 23ம் தேதி சோதனை ஓட்டம் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து சரக்கு ரயில் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. பயணிகள் ரயில் இயக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், 40 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று (29ம் தேதி) முதல் வரும் 8ம் தேதி வரை வேளாங்கண்ணி திருவிழாவிற்காக விழுப்புரம், கடலுார், சிதம்பரம், மயிலாடு துறை, பேரளம், திருநள்ளாறு, காரைக்கால் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் சேவை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்று காலை 9:10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்ட இந்த விழாக்கால சிறப்பு ரயில் நேற்று மதியம் 12:45 மணிக்கு, திருநள்ளாறு ரயில் நிலையத்துக்கு வந்தது.
ரயிலை, சபாநாயகர் செல்வம். அமைச்சர் திருமுருகன், சிவா எம்.எல்.ஏ., மலர் துாவியும், பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
பின்னர், ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்த சபாநாயகர் செல்வம், அமைச்சர் திருமுருகன் இருவரும் அதே ரயிலில் காரைக்கால் வரை பயண ம் செய்தனர்.

