போதிய டாக்டர்கள், ஆம்புலன்ஸ் இல்லாததால் நோயாளிகள் அவதி
போதிய டாக்டர்கள், ஆம்புலன்ஸ் இல்லாததால் நோயாளிகள் அவதி
ADDED : ஏப் 20, 2026 06:29 PM
புதுச்சேரி: முருங்கப்பாக்கம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் பற்றாக்குறை மற்றும் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர்.
முருங்கப்பாக்கம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது மருத்துவம், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவம், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை பிரிவுகள் இயங்கி வருகிறது.
காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை இயங்கும் சுகாதார நிலையத்திற்கு, தினமும் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், சுகாதார நிலையத்தில் இயங்கி வந்த ஆம்புலன்ஸ் போதிய பராமரிப்பு இல்லாததால் கடந்த சில மாதங்களுக்கு முன் பழுதடைந்தது. அதன்பின் சுகாதாரத்துறை மூலம் இதுவரையில் ஆம்புலன்ஸ் ஏதுவும் வழங்கப்படவில்லை.
இதனால், அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை, மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லவும், சுகாதார நிலையத்திற்கு தேவையான மருந்துகளை எடுத்து வரவும் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதற்கிடையே, விபத்து, தற்கொலை முயற்சி உள்ளிட்ட அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு முதலுதவி மட்டும் அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததால் காலதாமதம் காரணமாக உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
மருத்துவமனையில் மக்கள் தொகைக்கு ஏற்ப டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படாததால், பணிசுமை காரணமாக ஊழியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மருத்துவமனைக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்திதரவும், மக்கள் தொகைக்கு ஏற்ப டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்கவும் அரசு சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
