/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலைகளை மீண்டும் ஆக்கிரமித்தால் அபராதம்: கலெக்டர் குலோத்துங்கன் எச்சரிக்கை
/
சாலைகளை மீண்டும் ஆக்கிரமித்தால் அபராதம்: கலெக்டர் குலோத்துங்கன் எச்சரிக்கை
சாலைகளை மீண்டும் ஆக்கிரமித்தால் அபராதம்: கலெக்டர் குலோத்துங்கன் எச்சரிக்கை
சாலைகளை மீண்டும் ஆக்கிரமித்தால் அபராதம்: கலெக்டர் குலோத்துங்கன் எச்சரிக்கை
ADDED : நவ 16, 2024 02:09 AM

புதுச்சேரி: நகர சாலைகளை மீண்டும் ஆக்கிரமித்தால், அபராதம், வழக்கு பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி நகர சாலைகள் அனைத்தும் ஆக்கிரமிப்புகளால், குறுகி உள்ளன. இதனால் ஒவ்வொரு நாளும் வாகனங்கள், பாதசாரிகள் செல்ல முடியாதபடி, சாலைகள் போக்குவரத்து நெரிசலால் சிக்கி திணறி வருகின்றன.
ஒருவழியாக விழித்து கொண்டுள்ள மாவட்ட நிர்வாகம், கடந்த 4ம் தேதி முதல் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறது. சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளின் பொருட்கள், பேனர், கட் அவுட்களை அப்புறப்படுத்தி வருகின்றது. வரும் 29ம் தேதி வரை இந்த அதிரடி தொடரும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
ஆனால், ஒருபக்கம் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் மறுநாளே அதே இடத்தில், மீண்டும் ஆக்கிரமிப்புகள் அரங்கேறி வருகின்றன. கடைகளை பரப்பி மீண்டும் சாலைகளை ஆக்கிரமித்து கொள்கின்றனர்.
சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்படும்போதெல்லாம், இப்படி தான் நடந்து வருகின்றது. இது மாவட்ட நிர்வாகத்திற்கு தலைவலியாக மாறியுள்ளது. எனவே இந்தமுறை சாலை ஆக்கிரமிப்பு விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சாலையை மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால், முதலில் அபராதமும், அதற்கடுத்து வழக்கு, வர்த்தக உரிமம் ரத்து உள்ளிட்ட அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து கலெக்டர் குலோத்துங்கன் கூறியதாவது:
பொதுமக்களுக்கான சாலைகள் ஆக்கிரமிப்புகள் பிடியில் சிக்கி இருப்பதை ஏற்க முடியாது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏற்கனவே போதிய அவகாசம் கொடுக்கப்பட்டு விட்டது. தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிகொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் அகற்றவில்லை.
இதனால் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றி வருகிறோம். மீண்டும் சாலைகளை ஆக்கிரமித்தால் முதலில் அபராதம், அடுத்து வழக்கும் பதிவு செய்யப்படும்.
ஆக்கிரமிப்பு அகற்றியபோது, சில கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் இருந்ததால், அவர்களுக்கும் மட்டும் சிறிது கால அவகாசம் தரப்பட்டுள்ளது.
உண்மையான காரணம் என்பதால் தரப்பட்டது. மற்றப்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் கிடையாது. உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் நாங்கள் அகற்றிவிடுவோம். சாலை ஆக்கிரமிப்பில் இனி சமரசம் இல்லை' என்றார்.