ADDED : செப் 21, 2024 12:29 AM

அரியாங்குப்பம்: வேகமாக சென்ற வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் சோதனை செய்து அபராதம் விதித்தனர்.
புதுச்சேரி, மரப்பாலத்தில் இருந்து, கன்னியக்கோவில் வரை உள்ள கடலுார் சாலையில், அதி வேகமாக செல்லும், வாகனங்களால், தினமும் விபத்து ஏற்பட்டு வருகிறது. சாலை விபத்து குறித்து பொதுமக்கள் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசாரிடம் புகார் அளித்தனர்.
வேகமாக செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்தும் வகையில், சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போக்குவரத்து போலீசார் நேற்று கடலுார் சாலை, இடையார்பாளையம் பகுதியில், வேகத்தை அளவிடும் கருவியை கொண்டு, சோதனை செய்தனர்.
50 கி.மீ., வேகத்திற்கு மேல் சென்ற வாகனங்களை நிறுத்தி அபராதம் விதித்தனர். பைக், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாயும், பஸ், லாரி உள்ளிட்ட கனரக வானங்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்தனர்.