ஆற்றங்கரை கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
ஆற்றங்கரை கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
ADDED : டிச 13, 2024 06:16 AM

பாகூர்: பாகூர் தென்பெண்ணையாற்று கரையோர மக்களுக்கு, ஒலிப் பெருக்கி மூலமாக வருவாய் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பாகூர் பகுதியில் உள்ள கிராமங்களில் தண்ணீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
அந்த பாதிப்பில் இருந்து பொது மக்கள் மீளாத நிலையில், சாத்தனுார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக, சாத்தனுார் அணையில் இருந்து விநாடிக்கு 13 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான வருவாய் துறை ஊழியர்கள் சோரியாங்குப்பம், குருவிநத்தம், ஆராய்ச்சிக்குப்பம், கொம்மந்தான்மேடு, இருளஞ்சந்தை, மணமேடு உள்ளிட்ட கரையோர கிராமங்களில் ஒலி பெருக்கி மூலமாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
அப்போது, பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, கடந்து செல்லவோ, குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, செல்பி எடுப்பது கூடாது.
பொது மக்கள் தங்களின் பிள்ளைகள், உடமைகளுடன் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர்.
ஏற்கனவே ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், கரையோக கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
