/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய குழுவினரை முற்றுகையிட்ட மக்கள்
/
மத்திய குழுவினரை முற்றுகையிட்ட மக்கள்
ADDED : டிச 09, 2024 06:25 AM
புதுச்சேரி: வெள்ள சேதங்களை பார்வையிட வந்த மத்திய குழுவினரை டி.என்.பாளையத்தில் அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
பேரிடர் மேலாண்மை துறை இணை செயலாளர் ராஜேஷ்குப்தா தலைமையிலான 4 பேர் கொண்ட குழு திம்மநாயக்கன்பாளையம் (டி.என்.பாளையம்) இருளர் குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்தனர்.
ஆய்வை முடித்து கொண்டு புறப்பட்ட மத்திய குழுவினர் டி.என்.பாளையம்பேட் புதுநகர் வழியாக செல்லும்போது, அப்பகுதி மக்கள் வாகனங்களை மறித்து முற்றுகையிட்டனர். தங்கள் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து மத்திய குழுவினர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, புயல் வெள்ளத்தால் ரேஷன் கார்டுகளை இழந்து விட்டோம். புதிய ரேஷன் கார்டு கேட்டால் அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர் என சராமாரியாக குற்றம் சாட்டினர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அங்கிருந்து புறப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மழையால் உள்வாங்கிய இடையார்பாளையம் பாலம், என்.ஆர். நகர், நோணாங்குப்பம் பழைய பாலம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு சென்றனர்.
ஆய்வின்போது, புயல் மழையால் தங்கள் உடமைகளை இழந்து, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், நிவாரண உதவியை உயர்த்தி வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.