ADDED : மார் 17, 2026 04:17 AM
புதுச்சேரி: சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் நிகழ்வுகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் முன் அனுமதி பெற வேண்டும்.
இதுகுறித்து கலெக்டர் குலோத்துங்கன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சட்டசபை தேர்தலை முன்னிட்டு மாதிரி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், எந்த ஒரு தனி நபரோ, அரசியல் கட்சிகளோ, வேட்பாளர்களோ செய்தித்தாள் மற்றும் மின்னணு ஊடகங்களில் விளம்பரங்கள் வெளியிடுதல், பொதுக் கூட்டம் நடத்துதல், வாகனங்களை பயன்படுத்தி பிரசாரம் செய்தல், பேரணிகள் நடத்துவது, அரசியல் நிகழ்வுகளுக்கு ஒலிபெருக்கி பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் முன் அனுமதி பெறுவது அவசியமாகும்.
இதையொட்டி, பொதுமக்கள், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள்சிரமம் இல்லாமல் எளிதாக அனுமதி பெறுவதற்கு ஏதுவாக பல்வேறு துறை அதிகாரிகளை உள்ளடக்கிய அமைப்பு, சாரம், திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
அந்த அமைப்பு ஒற்றை சாளர முறையில்அரசியல் நிகழ்வுகளுக்கு அனுமதி அளித்து வருகிறது. ஆகவே, பொதுக்கூட்டம், பிரசாரம், வாகன பிரச்சாரம், ஒலி பெருக்கி பயன்படுத்தி பிரசாரம் செய்தல், வீடியோ வேன் பிரசாரம் செய்ய விரும்போவோர் முறையாக விண்ணப்பங்களை சமர்ப்பித்து முன் அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பிறநபர்கள், செய்தித்தாள்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் வெளியிடும் அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கு அனுமதி வழங்கிட ஊடக சான்றிளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
லாஸ்பேட்டை, இ.சி.ஆர் மாநில அவசர கால மையத்தின் கருத்தரங்கு கூடத்தில் செயல்படும் குழுவிடம்,அரசியல் தொடர்பான விளம்பரங்கள் ஊடகங்களில் வெளியிட விரும்புவோர், தங்களது விளம்பரங்களை சமர்ப்பித்து சான்றிதழ் பெற்ற பிறகே வெளியிட வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விளம்பரம் ஒளிபரப்புவதற்கு , 3 நாட்கள் முன்னதாகவும், மற்ற நபர்கள் 7 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
