/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிப்பர் லாரியில் சிக்கி பிளஸ் 2 மாணவர் பலி
/
டிப்பர் லாரியில் சிக்கி பிளஸ் 2 மாணவர் பலி
ADDED : ஜன 22, 2025 07:17 AM

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே சுண்ணாம்பு கல் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி மோதியதில், பைக்கில் சென்ற பிளஸ் 2 மாணவர் உடல் நசுங்கி இறந்தார்.
அரியலுார் மாவட்டம், தளவாய் அடுத்த ஆதனக்குறிச்சியை சேர்ந்தவர் கருப்புசாமி மகன் கார்த்திக்,18. முள்ளுக்குறிச்சி அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்தவர் மகேந்திரன் மகன் மனோகரன்,19. நண்பர்களான இருவரும் நேற்று பகல் 1:00 மணியளவில் பைக்கில், பெண்ணாடம் வந்து கொண்டிருந்தனர்.
பைக்கை மனோகரன் ஓட்டினார். பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி ரயில்வே மேம்பால ரவுண்டானா சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியே சிமென்ட் ஆலைக்கு சுண்ணாம்பு கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி மோதியது.
இவ்விபத்தில், கார்த்திக் டிப்பர் சக்கரத்தில் சிக்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். மனோகரன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குணபாலன், சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.