கொம்பாக்கம் அரசு பள்ளியில் போக்சோ சட்ட விழிப்புணர்வு
கொம்பாக்கம் அரசு பள்ளியில் போக்சோ சட்ட விழிப்புணர்வு
UPDATED : நவ 27, 2026 06:51 PM
ADDED : நவ 27, 2026 06:46 PM

புதுச்சேரி: கொம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில், போக்சோ சட்ட விழிப்புணர்வு மற்றும் கல்வி வழிகாட்டுதல் பயிற்சி முகாம் நடந்தது.
தலைமையாசிரியர் வாசு தலைமை தாங்கினார். ஆசிரியை சொர்ணலட்சுமி வரவேற்றார். மாநில சட்ட உதவிகள் ஆணைய செயலர், நீதிபதி ரமேஷ் முகாமைத் துவக்கி வைத்து, இந்திய அரசியல் அமைப்பு, தகவல் அறியும் உரிமை, கல்வி உரிமை, குற்றவியல், குடும்ப வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், நுகர்வோர் பாதுகாப்பு, சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடப்பதால் ஏற்படும் மனநிலை மாற்றங்கள், சைபர் குற்றங்கள், போக்சோ சட்டங்கள் மற்றும் நீதித்துறையில் வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார்.
சிறார் நீதிக் குழுமத்தின் சட்ட நன்னடத்தை அதிகாரி ஜெகதீஷ், சிறுவர்களுக்கான உரிமைகள், சிறுவர் நலக் குழுவின் அதிகாரங்கள், கடமைகள், இணைய தள விளையாட்டுகளால் ஏற்படும் பண இழப்புகள், குழந்தைகள் அவசர உதவிக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய எண் 1098 பயன்பாடுகள் குறித்து பேசினார்.
புதுச்சேரி அரசின் முன்னாள் சிறுவர் நலக்குழு உறுப்பினர் எழுத்தாளர் அரிமதி இளம்பரிதி, நவீன வேலைக்கான திறன்கள், போட்டித் தேர்வுகளுக்கான தகுதிகள், பேச்சாற்றல், கல்வி, மாணவப் பருவத்தில் வளர்த்துக் கொள்ள வேண்டிய தனித் திறன்கள் குறித்து பேசினார்.
பொறுப்பாசிரியர் பிரபாகர் நன்றி கூறினார். ஆசிரியர் பொற்செல்வன் தொகுப்புரையாற்றினார். கலந்துரையாடலில் சிறப்பாகப் பங்கேற்ற மாணவர்களுக்கு நுால்கள் பரிசாக வழங்கப்பட்டன.
