/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கட்டாய 'ஹெல்மெட்' போலீசார் தீவிர சோதனை
/
கட்டாய 'ஹெல்மெட்' போலீசார் தீவிர சோதனை
ADDED : ஜன 20, 2025 06:17 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் இன்று முதல் கடுமையாக்கப்படும் என, போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிவது,கடந்த 12ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதற்கிடையே, பொங்கல் பண்டிகை துவங்கியதால் ஹெல்மெட் அணிவதில் இருந்து வாகன ஓட்டிகளுக்கு சற்று தளர்வு அளிக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகை முடிந்ததையொட்டி, நேற்று முன்தினம் மாலை முதல் ஹெல்மெட் அணிவது தொடர்பாக போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, நகர எல்லைகளில் ஹெல்மெட் கட்டாய வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது. புதுச்சேரி சிவாஜி சிலை, மரப்பாலம் சாலை சந்திப்பு, முள்ளோடை, பத்துக்கண்ணு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து போலீசார் முதற்கட்டமாக வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
படிப்படியாக நகரப்பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
வாகன சோதனையின் போது, ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு போலீசார் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்து, எச்சரித்து அனுப்பினர். இந்த வாகன சோதனை பணி இன்று (20ம் தேதி) முதல் கடுமையாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.