ADDED : அக் 01, 2025 11:25 PM

புதுச்சேரி: பண்டிகை காலம் துவங்கியுள்ளதால், போக்குவரத்து போலீசார், வணிகர்கள் ஆலோசனை கூட்டம், முத்தியால்பேட்டை செண்பகா ஓட்டலில் நடந்தது.
கூட்டத்திற்கு சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். எஸ்.பி.,க்கள் ஸ்ருதி, ரச்சனா சிங், இன்ஸ்பெக்டர் நாகராஜ், சுரேஷ்பாபு, வர்த்தக சபை தலைவர் குணசேகரன், செயலாளர் நமச்சிவாயம், துணை செயலாளர் குகன் உள்ளிட்ட நிர்வாகிகள், நேரு வீதி வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் கூறுகையில், 'தற்போது பண்டிகை காலம் வர உள்ளதால், நேரு வீதியில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் வேலை செய்வோர் தங்களது வாகனங்களை கடைகளின் முன்பு நிறுத்தாமல், பழைய சிறை வளாகத்தில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும்.
கடைகளின் எதிரே வாடிக்கையாளர்கள் வாகனங்கள் நிறுத்துவதை, நிறுவனத்தினர் தான் முறைப்படுத்த வேண்டும்.
நேரு வீதி, காந்தி வீதி, மிஷன் வீதி, அண்ணா சாலை, காமராஜ் சாலை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்தை சரி செய்ய வணிகர்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
கடைகள், வியாபார நிறுவனங்களில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என்றார்.