UPDATED : மே 03, 2026 09:39 PM
ADDED : மே 03, 2026 09:11 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் ஓட்டு எண்ணிக்கையின் போது போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் என, 1450 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை (4ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி, புதுச்சேரியில் 1,250 போலீசார் ஓட்டு எண்ணும் மையம், புறநகர் மற்றும் கிராம பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதன்படி, காலை 5:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும், மதியம் 1:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும், இரவு 9:00 மணி முதல் மறுநாள் காலை 5:00 மணி வரை என, 3 ஷிப்ட்களாக போலீசார் பிரிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் 200 துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இதேபோல், காரைக்காலில் 500, மாகேவில் 400, ஏனாமில் 450 போலீசாரும், தலா 100 துணை ராணுவ படையிரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், ஓட்டு எண்ணிக்கை முடிந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ரெட்டியார்பாளையத்தில் உள்ள தேர்தல் துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லும் வரை போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்க வேண்டும் என, உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
