வில்லியனுாரில் எஸ்.பி., தலைமையில் போலீஸ் குறைகேட்பு கூட்டம்
வில்லியனுாரில் எஸ்.பி., தலைமையில் போலீஸ் குறைகேட்பு கூட்டம்
ADDED : ஏப் 24, 2026 07:20 PM

வில்லியனுார்: வில்லியனுார் மேற்கு பகுதி எஸ்.பி., அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள வில்லியனுார், மங்கலம், நெட்டப்பாக்கம், திருபுவனை, திருக்கனுார், காட்டேரிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் போலீசாரின் குறைகேட்பு கூட்டம், தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு எஸ்.பி., சுப்ரமணியன் தலைமை தாங்கி, போசியதாவது:
மேற்கு பகுதியில் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் ரவுடிகள், கஞ்சா விற்பனை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து அதிக புகார்கள் வருகிறது. அவற்றை கட்டுப்படுத்த போலீசார் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். போலீசாரின் குறைகள் எதுவாக இருந்தாலும் என்னை நேரடியாக தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.
போலீசார் அனைவரும் உடல் நலனில் அக்கரை எடுத்துக்கொண்டு, தினசரி குறைந்தது ஒரு மணி நேரமாவது உடற்பயிச்சியில் ஈடுபடவேண்டும். போலீசார் குற்றவாளியுடன் தொடர்பில் இருந்தாலோ அல்லது குற்றவாளிகளுக்கு உதவி செய்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் எவ்வித குற்றசெயல்களும் நடைபெறாத வகையில் போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி குற்றச்செயல்கள் நடைபெறாமலும், பொதுமக்களிடம் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.
கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் வில்லியனுார்-கலைச்செல்வம், திருக்கனுார்-ராஜ்குமார், நெட்டப்பாக்கம்-கீர்த்திவர்மான் மற்றும் மகளிர் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப் இன்ஸ்பெக்டர்கள் திருமுருகன், பெரியசாமி, தமிழரசன், ராஜேஷ், கோவிந்தராஜ், வீரபுத்திரசாமி, ரீனா மற்றும் 120க்கும் மேற்பட்ட போலீசார் கலந்துகொண்டனர்.
