UPDATED : நவ 28, 2026 12:00 AM
ADDED : நவ 27, 2026 11:38 PM

புதுச்சேரி: புதுச்சேரி, செட்டிக்குளம் பகுதியில், நேற்று முன்தினம் இரண்டு வாலிபர்கள், கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக, முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், அந்த வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், முதலியார்பேட்டையை சேர்ந்த கோகுல்சரண், 19, மைக்கேல்ராஜ், 20, என்பது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட கோகுல்சரண், மைக்கேல்ராஜை, உடலநல பரிசோதனைக்காக போலீசார் நேற்று காலை, 10:00 மணிக்கு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று காத்திருந்தனர். அப்போது, கோகுல்சரண் தப்பி ஓடினார். போலீசார், கோகுல்சரணை விரட்டி பிடித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
* துாத்துக்குடி பனிமய மாதா சர்ச் பகுதியை சேர்ந்தவர் ராகுல், 27; த.வெ.க., பிரமுகர். நவ., 25ல் ராகுல் வீட்டின் முன் நிறுத்தியிருந்த காரை உடைத்து, கொடியை கிழித்த அதே பகுதியை சேர்ந்த தவுபிக், 21, என்பவரை, போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், அவரை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, தவுபிக் தப்பினார். நேற்று அவரது வீட்டில், தவுபிக்கை, போலீசார் கைது செய்தனர்.
