கவர்னர் மாளிகையில் மாணவர் துாங்கிய விவகாரம் போலீஸ்காரர் 'டிஸ்மிஸ்' ; ஏட்டு 'சஸ்பெண்ட்'
கவர்னர் மாளிகையில் மாணவர் துாங்கிய விவகாரம் போலீஸ்காரர் 'டிஸ்மிஸ்' ; ஏட்டு 'சஸ்பெண்ட்'
ADDED : மார் 13, 2026 06:05 AM
புதுச்சேரி: புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நள்ளிரவில் ஜார்கண்ட் மாணவர் கேட் ஏறி குதித்து ஏ.சி., அறையில் படுத்து துாங்கிய சம்பவம் தொடர்பாக, பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரரை 'டிஸ்மிஸ்' செய்தும், ஏட்டை 'சஸ்பெண்ட்' செய்தும் டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி கவர்னர் மாளிகையில், கடந்த 9ம் தேதி இரவு 10:45 மணிக்கு குருசுக்குப்பம் சாலையில் உள்ள இரண்டாவது 'கேட்' வழியாக ஏறி குதித்து, ஜார்க்கண்ட் மாநில மாணவர் ஹர்திக் ஷா உள்ளே சென்று, கவர்னரின் மகன் அறையில் துாங்கினார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உச்சபட்ச பாதுகாப்பு வளையத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் சர்வ சாதாரணமாக 'கேட்' ஏறி நுழைந்து போதை மாணவர் துாங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த அன்றிரவு கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த ஐ.ஆர்.பி.என்., போலீசார் மற்றும் ஊழியர்களை வெளியே விடாமல், கவர்னர் மாளிகையிலேயே போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை செய்தனர்.
அதில், மாணவர் நுழைந்த இரண்டாவது கேட்டில் பணியில் இருக்க வேண்டிய இரண்டு ஐ.ஆர்.பி.என்., போலீசார் எங்கு சென்றனர் என்ற தகவல் இல்லை. மற்ற போலீசாரை விசாரித்தபோது, அவர் கவர்னரின் உறவினர் என்று நினைத்து சந்தேகப்படவில்லை என, போலீஸ்காரர் சொன்ன பதில், அதிகாரிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் அலட்சியமாக இருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் வசந்தராஜாவை 'டிஸ்மிஸ்' செய்தும், தலைமை காவலர் (ஏட்டு) ஆனந்தவேலுவை 'சஸ்பெண்ட்' செய்து டி.ஜி.பி., ஷாலினிசிங் உத்தரவிட்டுள்ளார். மற்ற போலீசாரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.
'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட வசந்தராஜா, கடந்தாண்டு தவளக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் பணியில் இருந்துபோது, நகை திருட்டு வழக்கில், பெண்ணை துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
